பழைய ஆயக்கட்டு பாசன பகுதிகளில் 2ம் போக நெல் அறுவடை துவக்கம்

பொள்ளாச்சி : பழைய ஆயக்கட்டு பாசன பகுதிகளில் 2ம் போக நெல் அறுவடை பணி துவங்கப்பட்டது. பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை, கோட்டூர், கோபாலபுரம், அம்பாராம்பாளையம், மயிலாடுதுரை, ரமணமுதலிபுதூர், காளியாபுரம், ஒடையகுளம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில், ஒவ்வொரு ஆண்டும் முதல் போகம் மற்றும் 2ம் போகம் என இரு முறை நெல் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபடுகின்றனர்.

இதில், ஆனைமலை மற்றும் கோட்டூர் சுற்றுவட்டாரத்தில் பழைய ஆயக்கட்டு பாசன பகுதிகளில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில், 2ம் போக நெல் சாகுபடி துவங்கப்பட்டது. அவை பல இடங்களில் நன்கு செழித்து தற்போது அறுவடை பருவத்திற்கு ஏற்றவாறு உள்ளது.

இதனால் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பிருந்து, நெல் அறுவடை பணி துவங்கப்பட்டது. முதற்கட்டமாக ஆனைமலை பகுதியில் நெல் அறுவடை பணி துவங்கியது. பின் சில நாட்களில் கோட்டூர் பகுதியில் நெல் அறுவடை துவங்கப்பட்டது.

அறுவடை செய்யப்பட்ட நெல்லை, ஆனைமலை பகுதியில் அமைந்துள்ள அரசு தற்காலிக கொள்முதல் நிலையம் மற்றும் வெளியிடங்களுக்கு விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு செல்கின்றனர். தற்போது பழைய ஆயக்கட்டு பாசன பகுதிகளில் நெல் அறுவடை பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

அறுவடைக்கு கூலியாட்கள் பற்றாக்குறையால் பல இடங்களில், வாடகை நெல் அறுவடை இயந்திரங்கள் மூலம் அறுவடை நடைபெறுகிறது என்று விவசாயிகள் தெரிவித்தனர்.

Related Stories: