நாமக்கல்: தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா மற்றும் புதுவை உள்ளிட்டவற்றை உள்ளடக்கிய தென்மண்டல எல்பிஜி கேஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் நாமக்கல்லை மையமாக கொண்டு இயங்கி வருகிறது.
இந்த சங்கத்தில் சுமார் 4,500 கேஸ் டேங்கர் லாரிகள் உள்ளன. இவை அனைத்தும் மத்திய அரசுக்கு சொந்தமான பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களான ஐஓசி, பிபிசி, எச்பி.சி ஆகிய எண்ணெய் நிறுவனங்களுக்கு சொந்தமான சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து சமையல் எரிவாயுவை சிலிண்டர் நிரப்பும் மையங்களுக்கு கொண்டு செல்லும் பணியில் ஒப்பந்த அடிப்படையில் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் இந்த லாரிகளில் மத்திய அரசுக்கு சொந்தமான ஐஓசி நிறுவனத்திற்கு இயக்கப்பட்டு வரும் சுமார் 1000-க்கும் மேற்பட்ட டேங்கர் லாரிகளை இயக்காமல் தென்மண்டல எல்பிஜி கேஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் நிறுத்தி வைத்துள்ளது. இதற்கு காரணம் ஐஓசி நிறுவனம் தென்மண்டல எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்களுக்கு கடந்த 3 மாதங்களுக்கு மேலாக வாடகை வழங்காமல் இழுத்தடித்து வந்துள்ளது. இந்நிலையில் ஐஓசி நிறுவனம் வழங்க வேண்டிய வாடகை பாக்கி ரூ.50 கோடி வரை சென்றுள்ளது.
இந்த வாடகை பாக்கியை கேட்டு ஆங்காங்கே ஐஓசி நிறுவனத்திற்காக இயக்கப்பட்டு வந்த தென்மண்டல எல்பிஜி கேஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தை சேர்ந்த லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. வாடகை பாக்கியை கேட்டு திடீரென வேலைநிறுத்தத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ள சுமார் 1000-க்கும் மேற்பட்ட டேங்கர் லாரிகள் காரணமாக, சிலிண்டர் விநியோகம் பாதிக்கப்பட்டு சந்தையில் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் அதிகரிக்க கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது.
நிலுவை வாடகை பாக்கி தொகையை உடனடியாக வழங்க கோரி நடத்தப்படும் இந்த போராட்டத்தால் பெரும் அதிர்ச்சியும் ஏற்பட்டுள்ளது. மேலும் இந்தப் போராட்டம் தொடர்ந்தால் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. எரிபொருள் விலை உயர்வு மற்றும் போர் பதற்றச் சூழலில், வாடகை பாக்கி வராததால் தாங்கள் கடும் நஷ்டத்தில் இயங்கி வருவதாக லாரி உரிமையாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
