கோத்தகிரி : கோத்தகிரி கட்டபெட்டு நகரில் தினந்தோறும் போக்குவரத்து நெருக்கடியால் பொதுகம்மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, கோத்தகிரி பகுதியில் பார்க்கிங் வசதி ஏற்படுத்த கோரிக்கை விடுத்துள்ளனர்.
இயற்கை அழகுடன் கூடிய நேர்த்தியான கோத்தகிரி மலைப்பாதை வழியாக வனவிலங்குகளை கண்டுகளித்தவாறு சமவெளி பகுதிகளுக்கு செல்லும் இந்த வழியைத்தான் பெரும்பாலான வாகன ஓட்டிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் பயணம் செய்ய விரும்புவார்கள். அதிலும் கோடை சீசன் காலத்தில் உதகை-குன்னூர்-மேட்டுப்பாளையம் வழிப்பாதையாக மாற்றப்படும்.
அப்போது ஊட்டிக்கு வரும் அனைத்து வாகனங்களும் கோத்தகிரி வழியாகவே இயக்கப்படும்.கோத்தகிரி வழியாக செல்லும் வாகனங்கள் திரும்பி வருவதற்கும் இதே வழியை பயன்படுத்துகின்றனர்.
இந்நிலையில், கோத்தகிரி நகர் பகுதியில் நகராட்சி மற்றும் தனியார் சார்பில் உரிய வாகன நிறுத்துமிடம் அமைக்கப்படவில்லை. இதன் காரணமாக வாகனங்களை முறையாக நிறுத்த முடியாமல் வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களை ஆங்காங்கே சாலையோரம் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தி விட்டு செல்கின்றனர்.
இதனால், கோத்தகிரியில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக ஒவ்வொரு ஆண்டும் கோடை சீசன் காலங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவது தவிர்க்க முடியாத ஒன்றாகி உள்ளது.
ஊட்டியை போன்று கோத்தகிரியிலும் பல்வேறு சுற்றுலாதலங்கள் உள்ளன. இதனால் உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் சொந்த கார்களிலும், வாடகை கார்களிலும், பஸ்சிலும் ரயில்களிலும் கோத்தகிரிக்கு வந்து செல்கின்றனர். கோத்தகிரியில் உள்ள கோடநாடு காட்சி முனை பிரபலமானது. கடல் மட்டத்தில் இருந்து சுமார் 6 ஆயிரம் அடி உயரம் கொண்டது. இங்கிருந்து தெங்குமரஹாடா வனப்பகுதி, பவானி சாகர் அணை, சமவெளிப்பகுதிகளை கண்டு களிக்கலாம்.
இதனால் சுற்றுலா பயணிகள் இந்த பகுதியை பார்ப்பதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இது தவிர கோத்தகிரியில் கேத்தரின் நீர் வீழ்ச்சி, ரங்கசாமி மலை, நேரு பூங்கா, உயிலட்டி நீர்வீழ்ச்சி ஆகிய இடங்கள் உள்ளன.
இந்த நிலையில் இங்கு அதிகளவில் தேயிலை தோட்டங்கள் உள்ளன. மேலும், மலைக்காய்கறிகளும் அதிகளவில் பயிரிடப்படுகின்றன. குறிப்பாக நெடுகுளா, கூக்கல்தொரை, மசக்கல், மிலிதேன், எரிசி பெட்டா பகுதிகளில் கேரட், உருளைக்கிழங்கு, முள்ளங்கி, பீன்ஸ், முட்டைகோஸ், காலிபிளவர், மலைக்காய்கறிகளும், சுகுனி, புரூக்கோலி, சல்லாரை ஆகிய இங்கிலீஸ் காய்கறிகளும் பயிரிடப்படுகின்றன.
இந்த இங்கிலீஸ் காய்கறிகள் பெருமளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதனால் விவசாய வர்த்தக தொடர்புகள் உள்ளூர் மற்றும் வெளிநாடுகளுக்கும் ஏற்படுகிறது. இதன்காரணமாக வந்து செல்வோர் எண்ணிக்கையும் அதிகம்.இங்குள்ள நேரு பூங்காவில் ஆண்டுதோறும் நடைபெறும் கோடை விழாவில் காய்கறி கண்காட்சி அனைவரையும் கவரக்கூடியது.
கோடை விழாவில் இரண்டு நாட்கள் இந்த கண்காட்சி நடக்கிறது. கண்காட்சி நடைபெறும் போது, உதகை மலர்க்கண்காட்சி போல் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதும். இதுதவிர கோத்தகிரி மையப்பகுதியில் பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகம், தாலுகா அலுவலகம், நீதிமன்றம், கருவூலம், வங்கிகள், கார், ஆட்டோ நிறுத்தங்கள் உள்ளன.
இதனால், இங்கு தினசரி ஆயிரக்கணக்கில் வாகனங்கள் வந்து செல்கின்றன. மேலும், இங்கு தினசரி போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. தொடர்ந்து, அந்த பகுதியில் அடிக்கடி விபத்துக்களும் ஏற்பட்டு வருகிறது.
பள்ளிக்குழந்தைகள் சாலையை கடக்க முடியாமல் தவிக்கும் நிலை உள்ளது. குறிப்பாக கோத்தகிரியில் ராம்சந்த் சதுக்கம், காமராஜர் சதுக்கம், பஸ் நிலையம் பகுதிகளில் வாடகை கார்கள், ஆட்டோக்கள், மினிபஸ்கள் வந்து போவதால் வாகனங்கள் நெருக்கடி ஏற்படுகிறது.
கோத்தகிரி பஸ் நிலையத்தில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் டானிங்டன் பகுதி வரை ஏராளமான வாகனங்களை சாலையோரத்தில் நிறுத்தி செல்வதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே, கோத்தகிரியில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த பார்க்கிங் வசதி ஏற்படுத்த வேண்டும் என பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
