வாகனங்கள் தெரியும் வகையில் கான்வெக்ஸ் கண்ணாடிகள் பொருத்த கோரிக்கை

ஊட்டி : ஊட்டி-மஞ்சூர் சாலையில் கீழ் கைகாட்டி பகுதியில் சாலையின் நடுவே அமைக்கப்பட்டுள்ள ரவுண்டானாவில் குன்னூர் சாலையில் வரும் வாகனங்கள் தெளிவாக தெரியும் வகையில் கான்வெக்ஸ் கண்ணாடிகள் பொருத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் குந்தா வட்டத்திற்குட்பட்ட மஞ்சூர் பகுதியில் இருந்து ஊட்டி மற்றும் குன்னூர் பகுதிக்கு செல்ல கைகாட்டி வழியாக சாலை உள்ளது.

கேரளாவின் மன்னார்காடு, அகழி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரக்கூடிய சுற்றுலா பயணிகள் மஞ்சூர் வந்து அங்கிருந்து ஊட்டிக்கு செல்ல இந்த சாலையை பயன்படுத்துகின்றனர். இதுதவிர உள்ளூர் பொதுமக்களும் பிரதான சாலையான இசந்த சாலையை நாள்தோறும் பயன்படுத்தி வருகின்றனர்.

ஊட்டி, குன்னூர் சாலைகள் பிரியும் கீழ் கைகாட்டி பகுதியில் கடந்த ஓராண்டிற்கு முன்பு சாலை விரிவாக்க பணிகள் மேற்கொள்ளப்பட்டு சாலையின் நடுவே ரவுண்டானா அமைக்கப்பட்டது. சாலை விரிவாக்கம் செய்யப்பட்டதால் வாகனங்கள் சிரமமின்றி சென்று வருகின்றன.

ஊட்டி சாலையில் இருந்து வாகனங்கள் கைகாட்டி நோக்கி செல்லும் போது, குன்னூர் சாலையில் இருந்து வரும் வாகனங்கள் முறையாக தெரிவதில்லை.இதனால் விபத்துகள் ஏற்படும் அபாயம் நிலவி வருகிறது.

எனவே, வாகன ஓட்டிகளின் நலன் கருதி இப்பகுதியில் சாலையின் நடுவே அமைக்கப்பட்டுள்ள ரவுண்டானாவில் வாகனங்கள் தெளிவாக தெரியும் வகையில் கான்வெக்ஸ் கண்ணாடிகள் பொருத்த வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: