கோத்தகிரி : கோத்தகிரி கேத்தரின் நீர்வீழ்ச்சி செல்லும் சாலையில் தேயிலை தோட்டங்களின் நடுவே மலர்ந்துள்ள ஜகரண்டா மலர்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர்.நீலகிரி மாவட்டத்தில் தேயிலை தோட்டங்கள், சுற்றுலா தலங்கள் அதிக அளவில் உள்ளன. இதில் கோத்தகரியும் முக்கிய பங்கு வகிக்கிறது.
இந்நிலையில், பனிக்காலம் முடிந்து தற்போது கோடை காலம் துவங்கிய நிலையில் கோத்தகிரி பகுதியில் இதமான காலநிலை நிலவி வருகிறது. ஆண்டு தோறும் பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரை ஜகரண்டா மலர்கள் பூத்துக்குலுங்கும்.
ஜகரண்டா மலர்கள் பூக்கும் மரங்கள் நிழல் தரும் மரமாகவும், தேயிலை தோட்டங்களை அழகு படுத்தும் வேலியாகவும் ஆங்கிலேயர் காலத்தில் நடவு செய்யப்பட்டது. இந்த மரங்கள் ஆண்டுக்கு ஒரு முறை இலைகள் உதிர்ந்து மலர்கள் மட்டும் ஊதா நிறத்தில் பூத்துக்குலுங்கும்.
தற்போது கோத்தகிரி அருகே உள்ள கேத்தரின் நீர்வீழ்ச்சி செல்லும் சாலையில் மூனுரோடு, கேசலாட போன்ற பகுதியில் தேயிலை தோட்டங்களில் நடுவே ஜகரண்டா மலர்கள் பூத்து உள்ளன. இங்கு வரும் சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் பார்த்து ரசித்து செல்கின்றனர்.
