அழகியநத்தம் பெண்ணையாற்று பாலத்தில் தடுப்பு கட்டைகள் அமைத்து மின்விளக்கு வசதி ஏற்படுத்தி தர வலியுறுத்தல்

ரெட்டிச்சாவடி : கடலூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட தூக்கணாம்பாக்கம் அருகே அழகியநத்தம் கிராமம் உள்ளது. இப்பகுதியில் உள்ள தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே சுமார் 35 ஆண்டுகளுக்கு முன் புதுவை மற்றும் தமிழக பகுதியை இணைக்கும் வகையில் மேம்பாலம் அமைக்கப்பட்டது. இந்த பாலத்தை அழகியநத்தம், இரண்டாயிரவிளாகம், தூக்கணாம்பாக்கம், குட்டியாங்குப்பம், உள்ளிட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

மேலும் கடலூர் பகுதிக்கு பள்ளி, கல்லூரிகள் அன்றாட வேலைகள் அரசு ஊழியர்கள் என தினம்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இப்பாலத்தின் வழியாக பயணம் செய்து வருகின்றனர். இப்பாலம் வழியாக புதுவை எல்லையில் இருந்து மேல்பட்டாம்பாக்கம், பண்ருட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கும் மிக விரைவில் செல்லக்கூடிய வகையில் இந்தப் பாலம் அமைந்துள்ளது.போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த இப்பாலத்தில் இதுவரை மின்விளக்குகள் அமைக்கப்படாமல் உள்ளது.

இரவு நேரத்தில் பாலம் இருளில் மூழ்கியுள்ளதால் இவ்வழியாக செல்லும் கிராம மக்கள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். மேலும் பாலத்தின் இருபுறமும் முறையான தடுப்பு சுவர் இல்லாமல் உள்ளது. 3 அடி உயரத்தில் வெறும் தூண்கள் மட்டுமே அமைக்கப்பட்டு பாதுகாப்பாற்ற நிலையில் இப்பாலம் உள்ளது. இவ்வழியே இரவு நேரத்தில் செல்லும் வாகனங்கள் தவறி ஆற்றில் விழும் அபாயம் உள்ளது. பாலத்தை சீரமைத்து மின்விளக்குகள் அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும், என கிராம மக்கள் கோரிக்கை
விடுத்துள்ளனர்.

Related Stories: