சென்னை: திருத்தணி முருகன் கோயிலில் சித்திரை பெருவிழாவையொட்டி உற்சவர் புலி மற்றும் யானை வாகனத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். முருகப்பெருமானின் ஐந்தாம் படை வீடாக சிறந்து விளங்கும் திருத்தணி முருகன் கோயிலில், சித்திரை பெருவிழா தொடங்கி விமரிசையாக நடந்து வருகிறது. பள்ளிகளுக்கு கோடை விடுமுறை மற்றும் வார விடுமுறை நாளான நேற்று முருகன் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. அதிகாலை மூலவருக்கு பஞ்சாமிர்த அபிஷேக பூஜைகளை தொடர்ந்து தங்க கவசம் அலங்காரத்தில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வாகனங்கள் மற்றும் படிகள் வழியாக மலைக் கோயிலுக்கு வந்தடைந்தனர். பொது வழியில் மற்றும் ரூ.100 சிறப்பு கட்டண வழியில் பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். சித்திரை பெருவிழாவில் நேற்று மாலை முருகப்பெருமான் புலி வாகனத்தில் கோயில் மாட வீதியுலா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.தொடர்ந்து இரவு யானை வாகனத்தில் உற்சவர் வீதி உலா நடந்தது. பக்தர்கள் வசதிக்காக கோயில் நிர்வாகம் சார்பில் நீர், மோர், பிரசாதம் வழங்கப்பட்டது.
