திருவாரூர் : திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் 100 சதவிகித வாக்குபதிவினை வலியுறுத்தி மகளிர் திட்டம் சார்பில் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
தமிழகத்தில் வரும் 23ந் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதையடுத்து அனைத்து மாவட்டங்களிலும் தேர்தல் பணிகள் நடைபெற்று வருகிறது.
மேலும் 100 சதவிகித வாக்கு பதிவு தொடர்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் இருந்து வரும் திருவாரூர், திருத்துறைப்பூண்டி, நன்னிலம் மற்றும் மன்னார்குடி என 4 எம்எல்ஏ தொகுதிகளுக்காக கடந்த பிப்ரவரி மாதம் 23ந் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
அதன்படி, திருவாரூர் மாவட்டத்தில் இருந்து வரும் 4 தொகுதிகளிலும் ஆண் வாக்காளர்கள் 4 லட்சத்து 80 ஆயிரத்து 679 பேர்களும் , பெண் வாக்காளர்கள் 4 லட்சத்து 98 ஆயிரத்து 919 பேர்களும் மற்றும் இதரர் 54 பேர்களும் என மொத்தம் 9 லட்சத்து 79 ஆயிரத்து 652 வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர்.
இந்நிலையில் மாவட்டத்தில் 100 சதவிகித வாக்கு பதிவினை வலியுறுத்தியும், வாக்குரிமையின் முக்கியதுவம் குறித்தும் மகளிர் திட்டம் சார்பில் நன்னிலல் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பூந்தோட்டம் பகுதியில் பொதுமக்களின் வீடுகளுக்கே நேரடியாக சென்று துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் கடகம்பாடி மற்றும் சரபோஜிராஜபுரம் ஆகிய பகுதிகளில் மகளிர் சுய உதவி குழுவினர் மூலம் ரங்கோலி போடப்பட்டு 100 சதவிகித வாக்குபதிவு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
