திருவாரூர் மாவட்டத்தில் 3 தொகுதிகளில் 52 வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு

*31 மனுக்கள் தள்ளுபடி

திருவாரூர் : திருவாரூர் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற வேட்பு மனு பரிசீலனையின் போது பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர்கள் உட்பட 31 பேர்களின் வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் 52 வேட்பாளர்கள் இறுதி செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலுக்கான தேதி கடந்த மாதம் 15ந் தேதி இந்திய தேர்தல் ஆணையம் மூலம் அறிவிக்கப்பட்டது. அதன்படி, கடந்த மாதம் 30ந் தேதி முதல் வேட்புமனு தாக்கல் துவங்கி நேற்று முன்தினத்துடன் முடிவடைந்த நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் திமுக, அதிமுக, அமமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி, தவெக கட்சியினர் உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் மற்றும் சுயேட்சைகள் உட்பட மொத்தம் 83 பேர்கள் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்நிலையில் வேட்பு மனு பரிசீலனையானது நேற்று அந்தந்த தொகுதிகளின் தேர்தல் நடத்தும் அலுவலகங்களில் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இதில் திருவாரூர் தொகுதியில் திமுக வேட்பாளர் பூண்டிகலைவாணன், பாஜக வேட்பாளர் சந்திரசேகரன், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அஸ்வினி, தவெக வேட்பாளர் வீரமணி உள்ளிட்ட 9 பேர்களின் வேட்பு மனுக்கள் ஏற்றுகொள்ளப்பட்டுள்ளன.

இதேபோல் நன்னிலம் தொகுதியில் எஸ்.டி.பி.ஐ கட்சி வேட்பாளர் முகமது முபாரக், அதிமுக வேட்பாளர் காமராஜ், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தேன்மொழி, தவெக வேட்பாளர் பிரபாகரன் உள்ளிட்ட 18 பேர்களின் வேட்பு மனுக்கள் ஏற்றுகொள்ளப்பட்டுள்ளன.

மன்னார்குடி தொகுதியில் திமுக வேட்பாளர் டி.ஆர்.பி.ராஜா, அமமுக வேட்பாளர் காமராஜ், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பாரதிசெல்வன், தவெக வேட்பாளர் ராஜராஜன் உள்ளிட்ட 16 பேர்களின் மனுக்கள் ஏற்றுகொள்ளப்பட்டுள்ளன.

இதேபோல் திருத்துறைப்பூண்டி தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் மாரிமுத்து, அதிமுக வேட்பாளர் பாலதண்டாயுதம், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வினோதினி, தவெக வேட்பாளர் பாண்டியன் உள்ளிட்ட 9 பேர்களின் மனுக்கள் ஏற்றுகொள்ளப்பட்டுள்ளன.

மேலும் திருவாரூர் தொகுதியில் மனு தாக்கல் செய்த பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் அருள், நன்னிலம் தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்த ரவிசந்திரன் ஆகிய இருவரும் தங்களது கட்சிக்கான ஏ மற்றும் பி படிவம் வேட்பு மனுவுடன் தாக்கல் செய்யாததால் இவர்களது வேட்பு மனுக்கள் மற்றும் சுயேட்சைகள் உட்பட மொத்தம் 31 பேர்களின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ள நிலையில் 52 பேர்களின் மனுக்கள் ஏற்றுகொள்ளப்பட்டுள்ளன.

மேலும் மனுக்களை திரும்பு பெறுவதற்கான கால அவகாசம் நாளை (9ந் தேதி) முடிவடையவுள்ள நிலையில் அதன்பின்னர் களத்தில் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதி பட்டியல் தயார் செய்யப்பட்டு அவர்களுக்கான சின்னம் வழங்கப்பட்டு அதன்பின்னர் மின்னணு வாக்கு பதிவு இயந்திரத்தில் வேட்பாளர் பெயர் மற்றும் சின்னம் பொருத்தும் பணி நடைபெறவுள்ளது குறிப்பிடதக்கது.

Related Stories: