ஆர்.கே.பேட்டை, ஏப்.8: வெள்ளாத்தூர் இருளர் காலனியில் சிமெண்ட் பூச்சுக்கள் பெயர்ந்து விழுந்து எலும்பு கூடாக மாறிய மின் கம்பத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
ஆர்.கே.பேட்டை அடுத்த வெள்ளாத்தூர், இருளர் காலனி கிராமத்தில் சுமார் 20க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தில் உள்ள மின் கம்பத்தில் சிமெண்ட் பூச்சுகள் பெயர்ந்து விழுந்து, எலும்புக்கூடுபோல் காணப்படுவதால், எப்பொழுது வேண்டுமானாலும் சரிந்து கீழே விழுந்து அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
இதனை சீரமைக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும், இதுவரை எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டுகின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடியாக அசம்பாவிதம் ஏற்படும் முன் எலும்பு கூடாக உள்ள மின் கம்பத்தை அகற்றிவிட்டு, புதியதாக மின் கம்பம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
