தேனி மாவட்டத்தில் 4 தொகுதிகளில் 120 வேட்புமனுக்கள் தாக்கல்

*84 மனுக்கள் ஏற்பு; 36 மனுக்கள் தள்ளுபடி

தேனி : தேனி மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளில் 120 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதில், 84 மனுக்கள் ஏற்கபட்டு, 36 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.தமிழகத்தில் வரும் ஏப்.23ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது.

இதற்காக கடந்த மார்ச் 30ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கி நேற்று முன் தினம் நிறைவடைந்தது. இதில் போடி தொகுதியியில் போட்டியிட திமுக, அதிமுக, நாதக, தவெக, சுயேச்சை உள்பட 35 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. நேற்று போடி தாசில்தார் அலுவலகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்றது.

ஒவ்வொரு வேட்பாளர்களும் அவருக்கு பதிலாக உள்ளவர்களும் கலந்து கொண்டனர். ஒவ்வொரு வேட்புமனுவையும் பரிசீலனை செய்ததில் 35 மனுக்களில் 19 மனுக்கள் ஏற்கப்பட்டது. தொடர்ந்து சரிவர மனுக்கள் பூர்த்தி செய்யாதது, ஒரு வேட்பாளரே இரண்டு மூன்று என வேட்பு மனு தாக்கல் செய்தது, முறையான ஆவணங்கள் இல்லாமல் போனது என 16 வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில் 19 வேட்பு மனுக்களில் வாபஸ் பெற நாளை கடைசிநாள், அதனை தொடர்ந்து இறுதி வேட்பாளர்கள் பட்டியல் உறுதி செய்யப்பட்டும்.

ஆண்டிபட்டி

ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றிக் கழகம் ஆகிய பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சைகள் என மொத்தம் 32 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.

மனுக்கள் மீதான பரிசீலனை நேற்று ஆண்டிபட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் கவிதா தலைமையில் நடைபெற்றது. ஆவணங்கள் சரியாக இருந்த திமுக, அதிமுக, நாம் தமிழர் மற்றும் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர்களின் மனுக்கள் உட்பட மொத்தம் 21 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. 11 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

வேட்புமனுக்களை வாபஸ் பெற வழங்கப்பட்ட கால அவகாசத்தில், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மாற்று வேட்பாளராக மனு தாக்கல் செய்திருந்த ராதிகா மற்றும் ஒரு சுயேச்சை வேட்பாளர் என மொத்தம் இரண்டு பேர் தங்கள் மனுக்களைத் திரும்பப் பெற்றனர். வாபஸ் காலக்கெடு முடிந்த நிலையில், தற்போது 19 வேட்பாளர்கள் இறுதியாக களத்தில் உள்ளனர். இவர்களுக்கான சின்னங்கள் ஒதுக்கப்பட்டு, இறுதி வேட்பாளர் பட்டியல் நாளை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட உள்ளது.

பெரியகுளம்

பெரியகுளம் சட்டமன்ற தொகுதியில் திமுக தலைமையிலான கூட்டணியில் விசிக அதிமுக தலைமையிலான கூட்டணியில் அமமுக, நாம் தமிழர் கட்சி மற்றும் தவெக, தவாக மற்றும் சுயேச்சைகள் உள்பட 21 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். நேற்று பெரியகுளம் சார்- ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் ரஜத் பீடன் தலைமையில் வேட்பு மனு பரிசீலனை நடந்தது.

அப்போது, தவாக வேட்பாளர் ரகுநாதன், சுயேட்சை வேட்பாளர்கள் ஆனந்த், பரதன், சென்ராயன் ஆகியோரின் மனுக்களும், மாற்று வேட்பாளர்களாக மனு தாக்கல் செய்திருந்த விசிக வை சேர்ந்த கார் கண்ணன், நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சங்கீத பிரியா உள்பட 6 பேரின் வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன . மீதமுள்ள 15 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டன.

உத்தமபாளையம்

கம்பம் சட்டமன்றத் தொகுதியில் தாக்கல் செய்யப்பட்ட 32 வேட்பு மனுக்களில் 29 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன. 3 மனுக்கள் நிராகரிக்கப்பட்டது. திமுக சார்பில் இரண்டு வேட்பாளர்கள் 4 மனுக்களையும், அ.தி.மு.க சார்பில் 2 வேட்பாளர்கள் 5 மனுக்களையும், நாம் தமிழர் கட்சி – 2 வேட்பாளர்கள் 5 மனுக்கள், தமிழக வெற்றிக்கழகம் சார்பில் 2 வேட்பாளர்கள்கள் சார்பில் 2 மனுக்களும், தமிழக வாழ்வுரிமைக் கட்சி -1, புதிய தலைமுறை மக்கள் கட்சி – சார்பில், 1 மனுக்கள், சுயேட்சைகள் மொத்தம் 14 பேர் மனுக்களை தாக்கல் செய்தனர். மொத்தம் 24 வேட்பாளர்கள் என 32 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வேட்பு மனுக்கள் அனைத்தும், கம்பம் தொகுதி தேர்தல் அலுவலரும் உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியமான காதர் முகைதீன் இப்ராகீம் தலைமையில் வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டன.

இதில் தேர்தல் பார்வையாளர் வினய்யாதவ் கலந்து கொண்டார்.அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சியின் முகவர்கள் கலந்து கொண்டனர். இவ்வாறாக 4 தொகுதிகளிலும் மொத்தமாக 120 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதில், 84 மனுக்கள் ஏற்கப்பட்டு 36 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

Related Stories: