வருசநாடு பகுதியில் களைகட்டிய கொட்டை முந்திரி சீசன்

வருசநாடு : கடமலை-மயிலை ஒன்றியத்திற்கு உட்பட்ட வருசநாடு, வாலிப்பாறை, காந்திகிராமம், சீலமுத்தையாபுரம், முத்தாலம்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டார மலைக்கிராமங்களில் பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் கொட்டை முந்திரி விவசாயம் நடைபெற்று வருகிறது.

கடந்த சில வாரங்களாக நிலவி வரும் சாதகமான தட்பவெப்ப நிலை காரணமாக தற்போது முந்திரி மரங்களில் பூக்கள் பூத்து குலுங்குவதுடன் பிஞ்சுகளின் உற்பத்தியும் கணிசமாக அதிகரித்து காணப்படுகிறது.

இருப்பினும், கடந்த மாதம் பெய்த திடீர் ஆலங்கட்டி மழை காரணமாக தங்கம்மாள்புரம் உள்ளிட்ட ஒரு சில பகுதிகளில் மட்டும் முந்திரி உற்பத்தி பாதிப்புக்கு உள்ளானது. மற்ற அனைத்து கிராமங்களிலும் முந்திரி விளைச்சல் அமோகமாக இருப்பதால், இந்த ஆண்டு அறுவடை பணிகளின் போது கூடுதல் மகசூல் கிடைக்கும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

கடந்த ஆண்டு உற்பத்தி குறைந்திருந்த போதிலும், சந்தையில் ஒரு கிலோ கொட்டை முந்திரி ரூ.100க்கும் அதிகமாக விற்பனை செய்யப்பட்டதால் குறைந்த அளவிலான லாபம் மட்டுமே கிடைத்தது.

இந்த ஆண்டும் விலை உயர்ந்து காணப்பட்டால் அதிக உற்பத்தி மற்றும் விலை ஏற்றம் என இரண்டுமே கிடைத்து தங்களுக்கு கூடுதல் லாபம் ஈட்டித் தரும் என்ற பெரும் எதிர்பார்ப்பில் இந்த பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியுடன் காத்திருக்கின்றனர்.

Related Stories: