கற்பகநாதர்குளம் கிராமத்தில் ரூ.62.50 லட்சத்தில் புதியதாக கட்டப்பட்ட கொள்முதல் நிலையம்

*விவசாயிகளின் கனவு நினைவானது

*அரசுக்கு கிராம மக்கள் பாராட்டு

முத்துப்பேட்டை : முத்துப்பேட்டை அருகே கற்பகநாதர்குளம் கிராமத்தில் ரூ.62.50 லட்சத்தில் புதியதாக கட்டப்பட்ட கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது. இதனால் விவசாயிகளின் கனவு நினைவானதால், அரசுக்கு கிராம மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

டெல்டா மாவட்டங்களில் கடைமடை மாவட்டமான திருவாரூர் மாவட்டத்தில் விவசாயிகளிடமிருந்து நேரடியாக நெல் மணிகளை கொள்முதல் செய்ய ஏதுவாக தேவையான அனைத்து இடங்களிலும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் முலம் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டன.

இந்த நேரடி கொள்முதல் மையங்கள் சுமார் 33 சென்ட் பரப்பளவு மற்றும் 100 மெட்ரிக் சேமிப்பு வசதி, நெல் மணிகள் உலர்த்தும் தளம், வின்னோவிங் மெஷின், மின்னணு எடை அளவீடு மற்றும் ஈரப்பதம் மீட்டர் ஆகியவை ஆகியவற்றைக் கொண்டிருக்கும்.

நேரடி நெல் கொள்முதல் மையங்களுக்கு நிரந்தர உள் கட்டமைப்பை வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு முடிவு செய்து ஏராளமான ஊர்களில் சொந்த கட்டிடங்கள் கட்டப்பட்டன.

அதன் வகையில் முத்துப்பேட்டை ஒன்றியத்திலும் பல இடங்களில் இந்த நேரடி நெல் கொள்முதல் நிலையம் கட்டப்பட்டுள்ளது. இதில் முத்துப்பேட்டை அடுத்த கற்பகநாதர்குளம் மற்றும் சுற்றுப்புற விவசாயிகள் நலன்கருதி இங்கு சகல வசதிகளுடன் நிரந்தர நேரடி நெல் கொள்முதல் அமைத்து தரவேண்டும் என இப்பகுதி விவசாயிகளின் நீண்டநாள் கோரிக்கையாக இருந்தது.

இதில் இப்பகுதியில் தொடர் வெள்ளம், புயல் கனமழை என இயற்கை சீற்றம் ஏற்பட்டதால் கடந்த 10 ஆண்டுகளாக இப்பகுதி விவசாயிகள் பல்வேறு வகையில் கோரிக்கை வைத்து வந்தனர். ஆனால் கடந்த 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த அதிமுக அரசு கண்டுக்கொள்ள வில்லை.

அடுத்தது திமுக ஆட்சிக்கு வந்ததும் எந்தந்த பகுதிக்கு என்னன்னா தேவை என்பதை அறிந்த நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கற்பகநாதர்குளம் கிராமத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் சார்பில் ரூ.62.50 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக நெல் கொள்முதல் நிலையம் கட்ட சென்ற ஆண்டு உத்தரவிட்டார்.

அதன்படி பணிகள் உடனடியாக துவங்கி பணிகள் விறுவிறுப்பாக முழுவீச்சில் நடந்து பணிகள் நிறைவுபெற்று புதியதாக கட்டப்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தவாறு காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

இதனால் நீண்டகால கோரிக்கை நிறைவேற்றி தந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு இப்பகுதி விவசாயிகளும் கிராம மக்களும் மகிழ்ச்சி அடைந்து பாராட்டு தெரிவித்தனர்.

Related Stories: