சென்னை: பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் 2 ஜோசப், 2 விஜய், 3 ஜோசப் விஜய் என மொத்தம் 66 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். தமிழக சட்டமன்ற தேர்தல் இம்மாதம் 23ம் தேதி நடைபெற உள்ளது. வேட்பு மனு தாக்கல் நேற்று முடிந்து நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற உள்ளது. பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் ஏற்கனவே 26 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்த நிலையில் நேற்று கடைசி நாள் என்பதால் நேற்று ஒரே நாளில் 40 வேட்பு மனுக்கள் தாக்கல் நடந்தது. பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் நடிகர் விஜய் போட்டியிடுவதால் அனைவரும் உற்று நோக்குகின்றனர். அந்த வகையில் ஏற்கனவே இரண்டு முறை தவெக தலைவர் விஜய் சார்பில் வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், திருச்சி கிழக்கில் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுவுக்கும் பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுவுக்கும் வேறுபாடுகள் இருந்ததால் தவெக சார்பில் அதன் தலைவர் விஜய்காக நேற்று மூன்றாவது முறையாக அவரது பெயரில் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது. இதன் மூலம் தவெக தலைவர் ஜோசப் விஜய் பெயரில் மூன்று வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. மேலும் சுயேச்சையாக போட்டியிடும் ஜோசப் என்பவர் பெயரில் இரண்டு மனுக்களும் விஜய் என்பவர் பெயரில் இரண்டு மனு என மொத்தம் பெரம்பூர் சட்டமன்றத் தொகுதியில் மட்டும் 66 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதில் இரண்டு முறை மூன்று முறை வேட்பு மனு தாக்கல் செய்தவர்கள், இன்று தங்கள் வேட்பு மனுவை வாபஸ் பெரும் பட்சத்தில் போட்டியிடுபவர்களின் எண்ணிக்கை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேபோல், முதல்வரின் சொந்த தொகுதியான கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் ஏற்கனவே 20 பேர் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்துள்ள நிலையில், நேற்று ஒரே நாளில் 36 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் மொத்தம் 56 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். திருவிக நகர் சட்டமன்ற தொகுதியில் ஏற்கனவே 12 பேர் வேட்புமனு தாக்கல் செய்த நிலையில், கடைசிநாளான நேற்று 21 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். திருவிக நகர் சட்டமன்ற தொகுதியில் மொத்தம் 33 வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
