சேலம்: சேலம் மாவட்டம் இடைப்பாடி தொகுதியில் 8வது முறையாக போட்டியிடும் அதிமுக பொதுச்ெசயலாளர் எடப்பாடி பழனிசாமி, நேற்று தனது வேட்புமனுவை தேர்தல் நடத்தும் அலுவலர் நடராஜனிடம் சமர்ப்பித்தார். இதில் அவரது சொத்துவிபரம் மற்றும் குற்றவழக்குகள் தொடர்பான தகவல்களை தெரிவித்துள்ளார். குறிப்பாக, எடப்பாடி பழனிசாமி கடந்த 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது தாக்கல் செய்த வேட்புமனுவில் பொய்யான தகவல்களை அளித்ததாக, மிலானி என்பவர் கடந்த 2023ம் ஆண்டு வழக்கு ஒன்றை ெதாடர்ந்துள்ளார். இந்த வழக்கு தற்போது நீதிமன்றத்தில் இருப்பதாக தெரிவித்துள்ளார். இதேபோல், சென்னை நுங்கம்பாக்கம், திருச்சி, சேலம் டவுன் போலீஸ் ஸ்டேசன்களில் வழக்குகள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
சொத்துக்களை பொறுத்தவரை அசையும் சொத்தாக எடப்பாடி பழனிசாமிக்கு ரூ.50.86 லட்சமும், மனைவி ராதாவுக்கு ரூ.2.16 கோடியும், குடும்பத்தின் பெயரில் ரூ.49.24 லட்சமும் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இதில் எடப்பாடி பழனிசாமியிடம் ரூ.11.25லட்சம் மதிப்பிலான 100கிராம் தங்கநகையும், அவரது மனைவி ராதாவிடம் ரூ.81லட்சம் மதிப்பிலான 720கிராம் தங்கநகையும் இருப்பதாக தெரிவித்துள்ளார். அசையா சொத்துக்களை பொறுத்தவரை தன் பெயரில் எதுவும் இல்லை தெரிவித்துள்ள எடப்பாடி பழனிசாமி, அவரது மனைவி ராதா பெயரில் ரூ.3.45 கோடி மதிப்பிலும், குடும்பத்தின் பெயரில் ரூ.2.38 கோடி மதிப்பிலான சொத்துக்கள் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அதேசமயம் தனது கையிருப்பாக ரூ.50ஆயிரம், மனைவியிடம் ரூ.1லட்சம், குடும்பத்தினரிடம் ரூ.1லட்சம் இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் சேலம் வெள்ளக்கல்பட்டியைச் சேர்ந்த மூர்த்தி என்பவரிடம், எடப்பாடி பழனிசாமி ரூ.17 லட்சம் கடன் பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். தனது வேட்புமனுவில் கல்வித்தகுதியாக பிஎஸ்சி தேர்ச்சி பெறவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
