திரைப்பட இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனனுக்கு எதிரான வருமான வரி வழக்கு ரத்து: உயர் நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை: பிரபல சினிமா இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனனுக்கு எதிரான வருமான வரி வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன், இயக்குனராக உள்ள ஃபோட்டான் கதாஸ் தயாரிப்பு நிறுவனம், கடந்த 2013-14ம் நிதியாண்டில் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்யவில்லை எனக் கூறி அந்த நிறுவனத்துக்கு எதிராகவும், அதன் இயக்குனராக இருந்த கவுதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்டோருக்கு எதிராகவும் வருமான வரித்துறை கடந்த 2019ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தது. சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி கவுதம் வாசுதேவ் மேனன் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் 2023ம் ஆண்டு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த மனு, நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது கவுதம் வாசுதேவ் மேனன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ரேவதி மணிவண்ணன், இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் கடந்த 2011ம் ஆண்டே ஃபோட்டான் கதாஸ் நிறுவனத்தின் இயக்குனர் பதவியில் இருந்து விலகி விட்டார். அந்த தகவல் முறையாக கம்பெனிகள் பதிவாளருக்கு தெரிவிக்கப்பட்ட நிலையில் 2013-14ம் நிதியாண்டில் வருமான வரி கணக்கை தாக்கல் செய்யவில்லை என்று வழக்கு தொடரப்பட்டுள்ளது என்று வாதிட்டார். இந்த வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதி, குறிப்பிட்ட நிதியாண்டுக்கு முன்பே இயக்குனர் பதவியில் இருந்து கவுதம் வாசுதேவ் மேனன் விலகி விட்ட நிலையில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யவில்லை என்று அவருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, அந்த வழக்கு ரத்து செய்யப்படுகிறது என்று உத்தரவிட்டார். அதேசமயம், மற்றவர்களுக்கு எதிரான இந்த வழக்கை எழும்பூர் நீதிமன்றம் விரைந்து முடிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

Related Stories: