‘டிஎன் 2026’ படத்தை வெளியிட தடைகோரி வழக்கு: விரைவில் விசாரணை

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தல் நடைமுறைகள் முடிவடையும் வரை டிஎன் 2026 படம் வெளியிடப்படுவதை நிறுத்தி வைக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இயக்குனரும், நடிகருமான நட்ராஜ் நடிப்பில், உமாபதி ராமையா இயக்கத்தில் உருவாகியுள்ள டிஎன் 2026 திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது. ஏப்ரல் 10ம் தேதி இந்த திரைப்படம் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்திய அரசியல் நிகழ்வுகளை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தை தேர்தல் நடைமுறைகள் முடியும் வரை நிறுத்தி வைக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி தேசிய மக்கள் சக்தி கட்சி சார்பில் அதன் தலைவர் வழக்கறிஞர் எம்.எல்.ரவி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், டிஎன் 2026 படத்தை வெளியிட அனுமதித்தால், அது வாக்காளர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தும். நியாயமான தேர்தலையும் பாதிக்கும். எனவே, தேர்தல் நடைமுறைகள் முடிவடையும் வரை படம் வெளியிடப்படுவதை நிறுத்தி வைக்க கோரி ஏப்ரல் 6ம் தேதி அளித்தேன். எனது மனுவை, தேர்தல் ஆணையம் பரிசீலிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: