தேர்தல் ஆபீசில் திண்டுக்கல் சீனிவாசன் அலப்பறை நல்ல நேரம் முடிய போகுது… என் மனுவை முதலில் வாங்குங்க… அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதம்

 

திண்டுக்கல்: திண்டுக்கல் தொகுதி திமுக வேட்பாளர் ஐ.பி.செந்தில்குமார், வேட்பு மனு தாக்கல் செய்ய நேற்று நண்பகல் 12.05 மணிக்கு திண்டுக்கல் ஆர்டிஓ அலுவலகத்திற்கு வந்தார். அப்போது அவருக்கு முன்னால் ஒரு சுயேச்சை வேட்புமனு தாக்கல் செய்து கொண்டு இருந்தார். இதனால் செந்தில்குமார் வெளியில் நின்றிருந்தார். பகல் 12.20 மணிக்கு திடீரென அங்கு வந்த அதிமுக வேட்பாளர் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், ‘‘நல்ல நேரம் முடியப் போகிறது. என்னை முதலில் விடுங்கள்’’ என்றார். போலீசார் அவரை தடுத்து, ‘‘முதலில் வந்தவர் திமுக வேட்பாளர் ஐ‌.பி.செந்தில்குமார், அவரை உள்ளே விட்ட பின்பு தான் நாங்கள் மற்றவர்களை விடுவோம்’’ என்றனர். இதனால் திண்டுக்கல் சீனிவாசன் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபடத் துவங்கினார். அந்த நேரத்தில் ஐ.பி.செந்தில்குமார், திண்டுக்கல் சீனிவாசனை சமாதானம் செய்ய முயன்றார். உடனே திண்டுக்கல் சீனிவாசன், ‘‘தம்பி… நீயே இப்படி பேசலாமா… நல்ல நேரம் முடிய போகிறது, விடுங்கப்பா எங்கள’’ என்றார். இந்த நேரத்தில் ஐ.பி.செந்தில்குமாரை போலீசார் வேட்புமனுத் தாக்கல் ெசய்ய உள்ளே அனுமதித்தனர்.

இதனால் பொறுமையிழந்த திண்டுக்கல் சீனிவாசன், அலுவலகத்திற்குள் அத்துமீறி உள்ளே நுழைந்தார். அப்போது கதவருகில் நின்ற பெண் ஊழியர் திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் அவரது பின்னால் வந்தவரின் இடிபாடுகளில் நசுங்கிப் போனார். தொடர்ந்து திண்டுக்கல் சீனிவாசன், தேர்தல் அதிகாரி பழனிவேல் டேபிளை மறைத்து நின்று, ‘‘எனது வேட்புமனுவை முதலில் வாங்குங்கள்’’ எனக்கூறி அவரிடமும் பிரச்னை செய்ய ஆரம்பித்தார். அதற்கு தேர்தல் அதிகாரி பழனிவேல், ‘‘ஐயா… திமுக வேட்பாளர் முதலில் வந்து வேட்புமனுவை தாக்கல் செய்து விட்டார். இன்னும் உறுதிமொழி வாசிக்க வேண்டி உள்ளது. அதை வாசிக்க விடுங்கள்’’ என்றார். ஆனால் திண்டுக்கல் சீனிவாசனோ, ‘‘இல்லை, இல்லை… எனக்கு நல்ல நேரம் போய் விடும். உடனடியாக எனது வேட்புமனுவை வாங்கி விடுங்கள். அப்புறம் உறுதிமொழியை வாசிக்கட்டும்’’ என்றார். இதனால் தேர்தல் அதிகாரி பழனிவேலுக்கும், திண்டுக்கல் சீனிவாசனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது பாமக மாவட்டச் செயலாளர் ஜான் கென்னடி, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த டிஎஸ்பி கார்த்திக்கிடம் வாக்குவாதம் செய்தார். டிஎஸ்பி கார்த்திக் எவ்வளவோ சொல்லியும் கேட்காமல் திண்டுக்கல் சீனிவாசன் டேபிளை மறைத்து நின்று விவாதம் செய்ததால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த களேபரத்துக்கு இடையில் ஐ.பி.செந்தில்குமார் ஒரு வழியாக உறுதிமொழியை வாசித்து முடித்தார். தொடர்ந்து கூச்சல், குழப்பம் ஏற்பட்டதால் திமுக வேட்பாளரையும், அவரது கூட்டணி கட்சியினரையும் தேர்தல் அதிகாரி பழனிவேல் அமர சொல்லிவிட்டு பின்பு, திண்டுக்கல் சீனிவாசன் வேட்புமனுவை வாங்கினார். அப்போது உடன் இருந்தவர்கள் நல்ல நேரம் 12.51க்கு தான் என கூறியதால் திண்டுக்கல் சீனிவாசன், ‘‘இன்னும் 4 நிமிடம் இருக்கிறது நல்ல நேரம் வர’’ என பிடிவாதம் பிடித்ததால் மீண்டும் பிரச்னை ஏற்பட்டது. மேலும், அதிமுகவினர் நிருபர்கள் போர்வையில் உள்ளே புகுந்ததால் இருதரப்பிலும் மோதல் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டது. அப்போது பிரச்னை செய்யாமல் திமுக வேட்பாளர் ஐ.பி.செந்தில்குமார், முன்னாள் எம்எல்ஏ பாலபாரதி மற்றும் கூட்டணி கட்சியினர் அமைதியாக அமர்ந்து இருந்தனர்.

மேலும் இரு கட்சியினரும் கேட்டிற்கு வெளியே தொடர்ந்து கோஷமிட்டு கொண்டிருந்ததால் மோதல் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டது. போலீசார் அவர்களை தடுத்து சமாதானம் செய்தனர். இதையடுத்து புகாரின்படி அரசு அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்தது, அரசு ஊழியர்களை பணி செய்யவிடாமல் தடுத்தது என 2 பிரிவுகளின் கீழ் திண்டுக்கல் சீனிவாசன், பாஜ மாவட்ட தலைவர் முத்துராமலிங்கம், பாமக மாவட்ட தலைவர் ஜான் கென்னடி, அமமுக மாவட்ட செயலாளர் நல்லுசாமி, திண்டுக்கல் முன்னாள் மேயர் மருதராஜ் ஆகிய 5 பேர் மீது நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

 

Related Stories: