மேலூர்: மேலூரில் ஆலோசனைக் கூட்டத்திற்கு வந்த காங்கிரஸ் கட்சி வேட்பாளருக்கு கட்சி நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்து வெளியேற்றினர். தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணியில், காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இவற்றில் 27 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் முன்னதாக அறிவிக்கப்பட்ட நிலையில், மதுரை மாவட்டம் மேலூர் தொகுதிக்கு மட்டும் வேட்பாளர் அறிவிக்கப்படாமல் இருந்தது. இதனால் மிகுந்த எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியிருந்த இத்தொகுதிக்கு, காஞ்சிபுரம் முன்னாள் எம்பி விஸ்வநாதன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதனால் உள்ளூர் காங்கிரசார் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இந்த தொகுதியில் போட்டியிட ஆட்கள் இல்லாததுபோல் வெளியூர் நபரை வேட்பாளராக அறிவித்ததற்கு, காங்கிரசார் கடும் கண்டனம் தெரிவித்தனர். உடனடியாக விஸ்வநாதனுக்கு எதிராக கண்டன போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. இந்நிலையில் நேற்று கடைசி நாள் என்பதால், காங்கிரஸ் வேட்பாளர் விஸ்வநாதன் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு தயாரானார்.
அப்போது மேலூர் யூனியன் அலுவலகம் எதிரே உள்ள தனியார் மண்டபத்தில் காங்கிரஸ் கட்சியினரின் திடீர் ஆலோசனை கூட்டம் நடைபெற்று கொண்டிருந்தது. அக்கூட்டத்தில் வேட்பாளர் விஸ்வநாதனுக்கு எதிராக கட்சி நிர்வாகிகள் அனைவரும் பேசினர். அப்போது எதிர்பாராதவிதமாக விஸ்வநாதன் அங்கு வந்தார். அவருக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த கட்சி நிரவாகிகள், உடனடியாக அவரை வெளியேறும்படி கூறினர். வேட்பாளர் எவ்வளவோ சமாதானப்படுத்த முயன்றும், காங்கிரஸ் கட்சியினர் அவரது கருத்துக்களை ஏற்க மறுத்து வெளியேற்றினர். இதனைத்தொடர்ந்து திமுக நகர செயலாளர் யாசின் தலைமையில், திமுக மற்றும் விசிக நிர்வாகிகள் வேட்புமனு தாக்கல் செய்ய விஸ்வநாதனுடன் சென்றனர். காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் நூர்முகமது உள்ளிட்ட சிலர் மட்டும் உடன் வந்தனர்.
