ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் ரூ.4.30 கோடி சொத்து; வானதிக்கு ரூ.13 கோடி சொத்து 5 ஆண்டில் ரூ.4 கோடி அதிகரிப்பு

 

சென்னை: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அவிநாசி (தனி) தொகுதியில் பாஜ., சார்பில் போட்டியிடும் ஒன்றிய இணை அமைச்சர் எல். முருகன், நேற்று தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். வேட்புமனுவுடன் அவர் தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்தில் தனக்கும், தனது குடும்பத்தினருக்கும் உள்ள சொத்து விவரங்களை குறிப்பிட்டுள்ளார். அதன்படி எல். முருகனுக்கு ரூ.75.84 லட்சம் மதிப்பிலான அசையும் சொத்துக்களும், அவரது மனைவியிடம் ரூ.1.20 கோடி மதிப்பிலான அசையும் சொத்துக்களும், அவரது மனைவியிடம் ரூ.70 லட்சம் மதிப்பிலான 720 கிராம் தங்க நகைகள் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். மொத்த அசையா சொத்துக்களின் சந்தை மதிப்பு ரூ. 69.50 லட்சம் ஆகும். அவரது மனைவியின் பெயரில் ரூ.1.65 கோடி மதிப்பிலான நிலம் மற்றும் குடியிருப்பு கட்டிடங்கள் உள்ளதாக தெரிவித்துள்ளார். பல்வேறு வங்கிகளில் சுமார் ரூ.20.53 லட்சம் கடனும், மனைவிக்கு ரூ.18.62 லட்சம் வீட்டுக் கடனும் உள்ளதாக தெரிவித்து உள்ளார். எல். முருகன் மீது 3 வழக்குகளும், ஒரு தேர்தல் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கோவை வடக்கு சட்டமன்ற தொகுதியில் பாஜ வேட்பாளர் வானதி சீனிவாசன் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார். அதில், தன்னிடம் அசையும் சொத்தாக வானதி சீனிவாசன் பெயரில் 2 கோடியே 16 லட்சத்து 91 ஆயிரத்து 258 ரூபாயும், கணவர் சீனிவாசன் பெயரில் 3 கோடியே 62 லட்சத்து 53 ஆயிரத்து 108 ரூபாய் இருப்பதாக தெரிவித்து உள்ளார். வானதி பெயரில் ரூ.3.50 கோடி மதிப்பிலும், கணவர் பெயரில் 4.05 கோடி மதிப்பிலும் அசையா சொத்துகளாக தெரிவித்து உள்ளார். தவிர, தனது பெயரில் ரூ.83 லட்சமும், கணவர் பெயரில் ரூ.3.07 கோடிக்கு கடன் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். மொத்தம் அசையும், அசையா சொத்தாக ரூ.13.34 கோடி மதிப்பில் சொத்து இருப்பதாக தனது வேட்புமனுவில் தெரிவித்துள்ளார்.

மேலும், கடந்த 2021 சட்டமன்ற தேர்தலின் போது வானதி சீனிவாசன் தனது அசையும் சொத்து மதிப்பு ரூ.1.13 கோடி எனவும், கணவர் பெயரில் 2.24 கோடி இருப்பதாக குறிப்பிட்டு இருந்தார். மேலும், அசையா சொத்து தனது பெயரில் ரூ.5.03 கோடி எனவும், கணவர் பெயரில் ரூ.1.39 கோடி எனவும் குறிப்பிட்டு இருந்தார். மொத்தம் ரூ.9.79 கோடி அசையும், அசையா சொத்து இருப்பதாக கணக்கு காட்டியிருந்தார். மேலும், ரூ.59 லட்சம் கடன் இருப்பதாக தெரிவித்து இருந்தார். கடந்த 5 வருடங்களில் அவரது சொத்து மதிப்பானது ரூ.4 கோடி வரை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Related Stories: