மதுரை: எடப்பாடி பழனிசாமி ஆட்சி காலத்தில் நடந்த சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட 9 போலீசாருக்கு தூக்கு தண்டனை விதித்து மதுரை முதலாவது கூடுதல் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது. அவர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள ரூ.1.2 கோடி அபராதத்தை பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடாக வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டு உள்ளார். தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தைச் சேர்ந்தவர் ஜெயராஜ் (59). வியாபாரி. இவரது மகன் பென்னிக்ஸ் (31). தந்தை, மகன் இருவரும் சாத்தான்குளம் பஜாரில் செல்போன் விற்பனை மற்றும் பழுது பார்க்கும் கடை வைத்திருந்தனர்.
கடந்த 19.6.2020ல் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சி காலத்தில், கொரோனா ஊரடங்கு அமலில் இருந்தது. அப்போது இரவில் நீண்ட நேரம் கடையை திறந்து வைத்திருந்ததாக கூறி சாத்தான்குளம் போலீசார் தந்தை, மகன் இருவரையும் விசாரணைக்காக காவல்நிலையம் அழைத்துச் சென்றனர். அன்றிரவு போலீசார் விசாரணையில் இருவரையும் கடுமையாக தாக்கியுள்ளனர். படுகாயம் அடைந்த தந்தை, மகன் இருவரும் மறுநாள் கோவில்பட்டி கிளைச்சிறையில் அடைக்கப்பட்டனர். சிறையில் அடைத்த 5 மணிநேர இடைவெளியில் தந்தை, மகன் இருவரும் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இதில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு அரசியல் கட்சியினர், சாத்தான்குளம் பகுதி வணிகர்கள், பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.
இதுதொடர்பாக கோவில்பட்டி கிழக்கு காவல்நிலையம் சந்தேக மரணமாக வழக்குப்பதிந்து விசாரணை நடத்தியது. காவல்துறையினர் விசாரணையில் திருப்தி இல்லாததால் ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவின்பேரில் 29.6.2020ல் இவ்வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. ஜூலை 7ம் தேதி சிபிஐ விசாரணையைத் தொடங்கியது. சிபிஐ போலீசார் கொலை வழக்காக பதிவு செய்து அப்போதைய சாத்தான்குளம் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், எஸ்ஐக்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ், சிறப்பு எஸ்ஐ பால்துரை, போலீஸ்காரர்கள் முருகன், முத்துராஜ், சாமத்துரை, செல்லத்துரை, தாமஸ் பிரான்சிஸ், வெயிலுமுத்து ஆகிய 10 பேரை கைது செய்து, மதுரை மத்திய சிறையில் அடைத்தனர். விசாரணையின்போது சிறப்பு எஸ்ஐ பால்துரை இறந்தார். இதனால் மற்ற 9 பேர் மீதான வழக்கின் விசாரணை மதுரை முதலாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்தது.
100 சாட்சிகளிடம் விசாரணை: 21.12.2020 முதல் மதுரை முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் நடந்த இவ்வழக்கு விசாரணை, 18.2.2021ல் மதுரை முதலாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. 6 ஆண்டாக இங்கு விசாரணை நடந்து வந்தது. இந்த வழக்கில் பெண் போலீஸ்காரர்கள் பியூலா, ரேவதி, எஸ்ஐ ரவிச்சந்திரன் ஆகியோரின் சாட்சியம் முக்கியமானதாக கருதப்பட்டது. 100க்கும் மேற்பட்ட சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். இந்த வழக்கில் சிபிஐ தரப்பில் முதல்கட்டமாக 2,027 பக்கங்கள், இரண்டாம் கட்டமாக 400 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கில் 6 மாத காலம் அவகாசம் வழங்கப்பட்ட நிலையில், மேலும் 6 மாதம் அவகாசம் கோரி, ஐகோர்ட் கிளையில் மாவட்ட நீதிமன்றம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஜெயராஜ் குடும்பத்தினர் இந்த வழக்கில் விரைவாக தீர்ப்பு வழங்க ஐகோர்ட் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த ஐகோர்ட் கிளை 3 மாதம் அவகாசம் தந்து வழக்கை முடிக்குமாறு கடந்தாண்டு நவ. 26ல் உத்தரவிட்டது.
4 நீதிபதிகள் விசாரணை: வழக்கில் கைதானவர்கள் ஜாமீன் கோரி மதுரை மாவட்ட நீதிமன்றம், ஐகோர்ட், சுப்ரீம் கோர்ட் வரை சென்றனர். ஆனால், அனைத்தும் தள்ளுபடியாகின. இந்த வழக்கை மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் இதுவரை 4 நீதிபதிகள் விசாரித்துள்ளனர். இந்த வழக்கை இறுதியாக விசாரித்த நீதிபதி ஜி.முத்துக்குமரன், அனைத்து தரப்பு வாதங்கள் மற்றும் குறுக்கு விசாரணை என அனைத்தும் கடந்த மார்ச் 16ம் தேதி முடிந்த நிலையில் மார்ச் 23ல் தீர்ப்பு வழங்கப்படும் என அறிவித்தார். இந்த வழக்கில் மார்ச் 23ல் தீர்ப்பளித்த நீதிபதி ஜி.முத்துக்குமரன், ‘‘9 பேர் மீதான கொலை குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே 9 பேரும் கொலை குற்றவாளிகள் என தீர்மானிக்கப்படுகிறது.
இந்த வழக்கில் அனைத்து தரப்பு விசாரணைகளையும் பார்க்கும்போது குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் குற்றவாளிகள் என இந்த நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது. வழக்கில் முதல் குற்றவாளியான ஸ்ரீதர், வழக்கு விசாரணையின் போது ஆதார் ஆவணங்களை திருத்தி, நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். இதுகுறித்து தனியாக விசாரிக்கப்படும். காவல்துறையைச் சேர்ந்த 9 பேருக்கும், இவர்கள் செய்த குற்றத்திற்காக என்ன தண்டனை வழங்கலாம்? இவர்களின் முந்தைய நடத்தை என்ன என்பது குறித்து ஒன்றிய, மாநில அரசுகளின் தொடர்புடைய அதிகாரிகள் மார்ச் 30ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
9 பேரின் சொத்து ஆவணங்களை அந்தந்த மாவட்ட எஸ்பிக்கள் தாக்கல் செய்ய வேண்டும். 9 பேரின் சம்பள விபரங்களை எஸ்பிக்கள் தாக்கல் செய்ய வேண்டும். தண்டனை விபரங்கள், இழப்பீடு அந்த ஆவணங்களின் அடிப்படையில் முடிவு செய்யப்படும்’’ எனக்கூறி மார்ச் 30ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார். மார்ச் 30ல் விசாரணைக்கு வந்தபோது, ஒன்றிய அரசின் அறிக்கைக்காக ஏப். 2க்கு ஒத்திவைத்தார். அன்றைய தினம் விசாரணைக்கு வந்தபோது, 9 பேருக்கான தண்டனை குறித்து அனைத்து தரப்பு வாதம் நடந்த நிலையில், 6ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
9 பேரும் ஆஜர்: இதையடுத்து இந்த வழக்கு நீதிபதி ஜி.முத்துக்குமரன் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது குற்றவாளிகள் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 9 பேரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதையடுத்து நேற்று மாலை 9 பேருக்குமான தண்டனை விபரத்தை நீதிபதி வாசித்தார்.
தீர்ப்பில் கூறப்பட்டுள்ளதாவது: காவல் நிலையத்தில் வைத்து இருவரும் காவல் துறையினரால் சித்ரவதை செய்யப்பட்டு சாகடிக்கப்பட்டுள்ளனர். இருவரும் நிராயுதபாணியாக இருந்தபோதும், இரவு முழுவதும் காவல் நிலையத்தில் வைத்து தாக்கியுள்ளனர். இருவரும் வியாபாரிகள். சமூகத்தில் நல்ல அந்தஸ்தில் இருப்பவர்கள். அவர்கள் மீது எந்த குற்ற வழக்கும் இல்லை என்றே தெரிகிறது. குற்றவாளிகளை சார்ந்து குடும்பம் உள்ளது என்பதால் தண்டனையை குறைக்க வேண்டுமென்பதை ஏற்க இயலாது. தண்டனையை அவர்கள் செய்த குற்றத்தின் தன்மையை பொறுத்தே தீர்மானிக்க வேண்டும்.
அதிகார துஷ்பிரயோகம்: குற்றவாளிகள் தங்களின் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்துள்ளதால், கடுமையான குற்றமாகவே கருத வேண்டும். பொதுமக்கள் பணத்தில் அரசு ஊதியம் பெற்றவர்கள், பொருளாதார அழுத்தத்தையோ, மன அழுத்தத்தையோ காரணமாக கூற இயலாது. சட்டத்தை காக்க வேண்டியவர்களே குற்ற செயலில் ஈடுபட்டுள்ளார்கள். வேலியே பயிரை மேய்ந்து அதிகார துஷ்பிரயோகம் செய்துள்ளனர். தந்தை மகன் இருவர் மீதும் பொய் வழக்கு போடப்பட்டுள்ளது என்பது நிரூபணம் ஆகியுள்ளது. எங்கு அதிகாரம் உள்ளதோ அங்கு பொறுப்பு அதிகமாக இருக்க வேண்டும். சட்ட திட்டங்களை காற்றில் பறக்கவிட்டு காவல்துறையினர் செயல்பட்டுள்ளனர். இரக்கமின்றி அடித்ததை கொடூரமாகவே பார்க்க வேண்டும்.
அரிதான நேரடி சாட்சியம்: ஒரே நேரத்தில் தந்தை, மகன் என ஒரு குடும்பத்தின் ஆணிவேர் பிடுங்கப்பட்டுள்ளது. சாதாரண நபர்கள் குற்ற செயல்களில் ஈடுபட்டிருந்தால் அவர்களுக்கு சாதாரண தண்டனை வழங்கப்பட வேண்டும். ஆனால் சட்டத்தை பாதுகாக்க வேண்டிய காவல் துறையினரே இதில் குற்ற செயல்களை செய்துள்ளனர். காவல் நிலையங்களில் ஏற்படும் மரண வழக்குகளில் நேரடி சாட்சிகள் அரிதிலும் அரிதாகத்தான் இருக்கும். அந்த வகையில் இந்த வழக்கில் நேரடி சாட்சியம் உள்ளது.
மனசாட்சியை உலுக்கியது: குற்றவாளிகளுக்கு பொருளாதாரரீதியாகவும், கடுமையான தண்டனை வழங்கினால் தான் இதுபோன்ற குற்றங்கள் இனிமேல் நடைபெறுவதை தடுக்க முடியும். இந்த வழக்கில் நீதிமன்றங்கள் தலையிடாவிட்டால் இருவரின் உடல்களுடன் சேர்த்து உண்மையும் புதைக்கப்பட்டிருக்கும். உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற வழிகாட்டுதல்களை மீறி இந்த குற்றம் நடந்துள்ளது. எனவே, இந்த நீதிமன்றம் கடுமையான போக்கைத்தான் கடைபிடிக்க வேண்டியிருக்கும். இந்த வழக்கு மனசாட்சியை உலுக்கியுள்ளது. காவல் மரணங்கள் கொடூரமானது என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. ஆனாலும், இந்த குற்றங்கள் குறைந்தபாடில்லை. காவல் நிலைய மரணங்கள் இங்கு மட்டுமல்ல. உலகம் முழுவதும் நடைபெற்று வருகிறது.
குறிப்பாக அமெரிக்காவில் ஜார்ஜ் பிளாய்டு முதல் சிவகங்கை மாவட்டம் மடப்புரம் அஜித்குமார் கொலை வழக்கு வரையிலும் காவல் நிலைய சித்ரவதை மரணங்கள் நிகழ்கின்றன. தமிழ்நாடு அரசு தரப்பு அறிக்கையில் குற்றவாளிகள் மீதான குற்ற வழக்குகளின் விபரங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. காவல் மரணங்களை சகித்துக் கொள்ள முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒன்றிய அரசு தரப்பில் உச்சபட்ச தண்டனை வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அரிதினும் அரிதான வழக்குகளில் மட்டுமே தூக்கு தண்டனை விதிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. ஆயுள் தண்டனை விதிப்பதா, தூக்கு தண்டனை விதிப்பதா என கேள்வி வரும்போது, அரிதினும் அரிதான வழக்குகளில், ஆயுள் தண்டனை போதுமானதல்ல எனும்போதும், எதிரி திருந்த வாய்ப்பில்லை எனும்போதும் தூக்கு தண்டனை விதிக்கலாம் என விதிகள் கூறுகிறது.
இரக்கமின்றி தாக்குதல்: குற்றவாளிகளின் நோக்கம், குடும்பநிலை, பின்புலம் குறித்து ஆய்வு செய்ய வேண்டுமென கூறுகிறது. தந்தை முன் மகனையும், மகன் முன் தந்தையையும் சட்ட விரோதமாக அடைத்து வைத்து இரவு முழுவதும் தாக்கியுள்ளனர். இதனை எளிதாக கருத இயலாது. இரக்கமின்றி அடித்ததை கொடூரமாகவே பார்க்க வேண்டும். குற்றவாளிகளின் நோக்கம், குடும்பநிலை, பின்புலம் குறித்து ஆய்வு செய்ய வேண்டுமென கூறுகிறது. பழி வாங்க வேண்டுமென்ற நோக்கில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. மனித மாண்பு சிதைக்கப்படுகையில், நாகரீகம் பின்நோக்கி செல்கிறது. குற்றத்தின் அளவை பொறுத்தவரை, 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
அதன் கொடூரம் கருதியே ஐகோர்ட் கிளை விசாரணையை நேரடியாக கண்காணித்துள்ளது. இருவரும் நிராயுதபாணியாக இருந்தபோதும், இரவு முழுவதும் காவல் நிலையத்தில் வைத்து தாக்கியுள்ளனர். குற்றவாளிகள் நல்ல அறிவு வளர்ச்சியுள்ளவர்கள். படித்தவர்கள். ஆகவே இதனை சாதாரண குற்றமாக கருத இயலாது. குற்றவாளிகள் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்துள்ளதால், கடுமையாக குற்றமாகவே கருத வேண்டும். காவல்துறையினர் பொதுமக்களை பாதுகாக்க வேண்டும். அவர்களால் சாமானியர்கள் பாதிக்கப்படுகையில் உரிய நடவடிக்கை வேண்டுமென உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
இனி நிகழக்கூடாது: இவர்களுக்கு தூக்கு தண்டனை விதிப்பதே சிறந்தது என நீதிமன்றம் கருதுகிறது. தூக்கு தண்டனைதான் வழங்க வேண்டுமா என்பதையும் ஆலோசிக்க வேண்டியுள்ளது. தந்தை முன் மகனையும், மகன் முன் தந்தையையும் நிர்வாணப்படுத்தி மனம் போன போக்கில் தாக்கியுள்ளனர். இது ஏற்கத்தக்கதல்ல. அவற்றை வாசிக்கும்போது மனம் பதைக்கிறது. தமிழ்நாடு காவல்துறையில் பல நேர்மையான அதிகாரிகள் உள்ளனர். இருப்பினும் இதுபோன்ற வழக்குகளில் ஆயுள் தண்டனை வழங்கினால், இதுபோல செயல்படும் காவல்துறையினருக்கு அச்சத்தை ஏற்படுத்தாது. பொதுவாக காவல்நிலையங்களில் நிகழ்த்தப்படும் குற்றங்களில் நேரடி சாட்சிகள் இருக்காது. இந்த வழக்கில் சிசிடிவி காட்சிகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
இனியும் இவ்வாறு நிகழக்கூடாது என்பதற்கு உதாரணமாகவும், இவர்கள் இனிமேல் திருந்த வாய்ப்பில்லை என்பதாலும், பொதுமக்கள் எங்களை ஒன்றும் செய்ய முடியாது என்று நினைப்பதாலும், யாராலும் எதுவும் செய்ய முடியாது என்று நினைப்பதாலும் இவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்கலாம். எனவே, எதிரிகளுக்கு தூக்கு தண்டனை வழங்கப்படுகிறது. இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் தாக்கியதால் தான் மற்ற காவலர்களும் இணைந்து தாக்கியதாகக் கூறியுள்ளனர். அவர்கள் நினைத்திருந்தால் உயரதிகாரிகளிடம் கூறி இந்தச் சம்பவத்தை தடுத்திருக்கலாம். ஆனால், குற்றத்துக்கு உடந்தையாக இருந்துள்ளனர். அந்த வகையில் அவர்களும் குற்றவாளிகளே. ஆயுள்தண்டனை போதுமானதாக இருக்காது என இந்த நீதிமன்றம் கருதுகிறது.
இந்த சம்பவம் சமூகத்தின் மனசாட்சியை உலுக்கும் வகையிலேயே இருந்தது. அதற்கு பதிலளிக்கும் வகையிலும் தீர்ப்பு இருக்க வேண்டும். எனவே, 9 பேருக்கும் சாகும் வரை தூக்கு தண்டனை வழங்கப்படுகிறது. அபராத தொகையான ரூ.1 கோடியே 2 லட்சத்து 65 ஆயிரத்தை செலுத்த தவறினால், வருவாய் துறை பறிமுதல் சட்டப்படி குற்றவாளிகளுக்கு சொந்தமான சொத்துக்களை பறிமுதல் செய்தோ, அவர்களது ஜிபிஎப் தொகை மற்றும் பென்ஷன் திட்ட தொகைகளில் இருந்தோ தமிழ்நாடு அரசு வசூலிக்க வேண்டும். அபராத தொகையை பாதிக்கப்பட்டோரின் குடும்பத்திற்கு இழப்பீடாக வழங்க வேண்டும் என தீர்ப்பளித்த நீதிபதி, தீர்ப்பை வாசித்து முடித்ததும் தீர்ப்பெழுதிய அந்த பேனாவின் முள் முனையை உடைத்தார்.
* தமிழகத்தில் இதுவே முதன்முறை
வழக்கறிஞர் வாஞ்சிநாதன் கூறுகையில், ‘‘இந்திய மனித உரிமை வரலாற்றில் மிகவும் முக்கியமானதும், முன்னுதாரணமான தீர்ப்பாகவும் இது அமைந்துள்ளது. சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை உறுதிபடுத்தும் தீர்ப்பு இது. குற்றம் செய்தால் காவல்துறையினராக இருந்தாலும் தண்டனை கிடைக்கும் என்ற உத்தரவாதத்தை மதுரை நீதிமன்றம் தீர்ப்பாக வழங்கியுள்ளது. நீதித்துறையின் மீதான நம்பகத்தன்மையை அதிகரித்துள்ளது. இந்த வழக்கில் ஐகோர்ட் மதுரை கிளையின் தலையீட்டால் தான் இது சாத்தியமானது. நீதிமன்றத்தின் தலையீடு பிரச்னையின் உண்மைத்தன்மையை வெளிவர செய்தது. தற்போது தண்டிக்கவும் முக்கிய காரணமாக அமைந்துள்ளது. இதில் குறிப்பாக காவலர் ரேவதி, தான் சார்ந்த காவல் துறையினருக்கு எதிராக சாட்சியம் அளித்தது பாராட்டுக்குரியது. அதே நேரம் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரும் உறுதியான நின்று போராடினர். இந்த தீர்ப்பு இனிமேல் எதிர்காலத்தில் இதுபோல் நடக்க கூடாது என்பதற்கு காரணமாகவும், இதுபோன்ற குற்றத்தை குறைக்கவும் செய்யும். நான் அறிந்த வகையில் தமிழ்நாட்டில் மொத்தமாக 9 காவல் துறையினருக்கு தூக்கு தண்டனை வழங்கியது இதுவே முதன்முறை’’ என்றார்.
* மேல்முறையீடு செய்தால் நாங்களும் முறையிடுவோம்: ஜெயராஜ் மகள் பேட்டி
தூக்கு தண்டனை குறித்து ஜெயராஜ் மகள் பெர்சிஸ் கூறியதாவது: எங்களுக்கான நீதியை நீதிமன்றம் வழங்குமென நம்பினோம். இன்றைக்கு அது நடந்துள்ளது. இந்த வழக்கில் எங்களுக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி. எங்களுடைய துன்பத்தை அவர்களது துன்பமாக மக்கள் நினைத்தார்கள். எல்லாருமே எங்களுக்கு ஆதரவாக இருந்தார்கள். ஐகோர்ட் மதுரை கிளை இந்த வழக்கை தாமாக முன்வந்து எடுத்தது. இன்றைக்கு கிடைத்துள்ள நீதி பாமர மக்களுக்காக கிடைத்துள்ள நீதி.
எங்களை போல இன்னொரு குடும்பம் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக தான் இந்த தண்டனை வழங்கியுள்ளது. எங்களுக்கு நீதி கிடைக்க உறுதுணையாக இருந்த, சமூக ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள், ஊர் பொதுமக்கள், போராட்டம் நடத்தியவர்கள் என அனைத்து தரப்பு மக்களுக்கும் நன்றி. இது போன்று இனி எந்த குடும்பமும் பாதிக்கப்பட கூடாது. பாதிக்கப்பட்டவர்கள் மேல்முறையீடு செய்தால், நாங்களும் நீதிமன்றத்திற்கு சென்று முறையிடுவோம். எங்களின் கடைசி மூச்சு உள்ள வரை போராடுவோம். இனி இதுபோல் எந்த சம்பவமும் நடக்கக்கூடாது. இவ்வாறு கூறினார்.
* ரூ.1.02 கோடி அபராதம்
1. இன்ஸ்பெக்டர் தர் இரட்டை தூக்கு தண்டனை, 21 ஆண்டுகள் சிறை, ரூ.24.10 லட்சம் அபராதம்
2. எஸ்ஐ பாலகிருஷ்ணன் இரட்டை தூக்கு தண்டனை, 11 ஆண்டுகள் சிறை, ரூ.22.08 லட்சம் அபராதம்
3. எஸ்ஐ ரகுகணேஷ் இரட்டை தூக்கு தண்டனை, 18 ஆண்டுகள் சிறை, ரூ.5.30 லட்சம் அபராதம்
4. ஏட்டு முருகன் இரட்டை தூக்கு தண்டனை, 11 ஆண்டுகள் சிறை, ரூ.10.10 லட்சம் அபராதம்
5. காவலர் சாமதுரை இரட்டை தூக்கு தண்டனை, 8 ஆண்டுகள் சிறை, ரூ.2.25 லட்சம் அபராதம்
6. ஏட்டு முத்து ராஜா இரட்டை தூக்கு தண்டனை, 11 ஆண்டுகள் சிறை, ரூ,3.30 லட்சம் அபராதம்
7. காவலர் செல்லதுரை இரட்டை தூக்கு தண்டனை, 8 ஆண்டுகள் சிறை, ரூ.14.44 லட்சம் அபராதம்
8. காவலர் தாமஸ் ப்ரான்சிஸ் இரட்டை தூக்கு தண்டனை, 11 ஆண்டுகள் சிறை, ரூ.10.54 லட்சம் அபராதம்
9. காவலர் வெயிலுமுத்து இரட்டை தூக்கு தண்டனை, 8 ஆண்டுகள் சிறை, ரூ.10.54 லட்சம் அபராதம்.
