விஜயபிரபாகரன் வேட்பு மனு தாக்கலின்போது திமுக-அதிமுக கூட்டணியினர் மோதல்: விருதுநகரில் பரபரப்பு

 

விருதுநகர்: விருதுநகரில் விஜயபிரபாகரன் வேட்புமனு தாக்கலின் போது அதிமுக கூட்டணி கட்சியினர் வாக்குவாதம் செய்து கைகலப்பில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழக சட்டமன்ற தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்ய நேற்று கடைசிநாள் என்பதால், விருதுநகர் தாசில்தார் அலுவலகத்தில் டிஎஸ்பி யோகேஷ் குமார் தலைமையில் சுமார் 60க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அதிமுக வேட்பாளர் வி.ஜி.கணேசன் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் வேட்பு மனு தாக்கல் செய்ய பிற்பகல் 12.30 மணிக்கு தாசில்தார் அலுவலகம் வந்தார். அப்போது, பேரிகார்டு தடுப்பு பகுதியில் நின்ற போலீசார், வேட்பாளருடன் 4 பேர் மட்டும் செல்ல அனுமதித்தனர். இதன்பிறகு திமுக கூட்டணி கட்சி சார்பில் தேமுதிக வேட்பாளர் விஜயபிரபாகரன் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தார். அவருடன் அமைச்சர் தங்கம்தென்னரசு, ஏஆர்ஆர்.சீனிவாசன் எம்எல்ஏ, தேமுதிக மாவட்ட செயலாளர் காஜா ஷெரீப் உள்ளிட்டோர் வந்தனர். பேரிகார்டு பகுதியில் நின்றிருந்த அதிமுக கூட்டணி கட்சியினரும், தேமுதிக வேட்பாளருடன் வந்திருந்த திமுக கூட்டணி கட்சியினரும் ஒரே இடத்தில் குவிந்தனர். மேலும் திமுக தரப்பில், தாசில்தார் அலுவலகம் வரை காரில் செல்ல அனுமதி பாஸ் வாங்கி இருந்தனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்த அதிமுகவினர், ‘‘எங்களை மட்டும் ஏன் உள்ளே செல்ல அனுமதி மறுத்தீர்கள்’’ என போலீசாரிடம் வாக்குவாதம் செய்து, உள்ளே செல்ல முயன்று தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டனர்.

இதுதொடர்பாக அங்கு நின்றிருந்த அதிமுக, திமுக கூட்டணி கட்சியினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில் கைகலப்பு ஏற்பட்டது. அப்போது, காரில் இருந்து இறங்கிய அமைச்சர் தங்கம்தென்னரசு, ஏஆர்ஆர்.சீனிவாசன் எம்எல்ஏ, டிஎஸ்பி யோகேஷ்குமார் ஆகியோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்தினர். கைகலப்பில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்ய முயன்றபோது டிஎஸ்பி யோகேஷ் குமாரின் நேம்பேட்ஜ் சரிந்தது. பின்னர் இருதரப்பும் கலைந்து சென்றனர். இதையடுத்து அமைச்சர் தங்கம்தென்னரசு, ஏஆர்ஆர்.சீனிவாசன் எம்எல்ஏ, காங்கிரஸ் கிழக்கு மாவட்ட தலைவர் கிருஷ்ணமூர்த்தி முன்னிலையில் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன், தேர்தல் அலுவலர் ஜான்சன் தேவசகாயத்திடம் வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது டெபாசிட் பணம் ரூ.10 ஆயிரம் கொண்டு வரப்படவில்லை. இதனால் சிறிது நேரம் காலதாமதம் ஏற்பட்டது. இதையடுத்து உடன் வந்திருந்த காங்கிரஸ் நிர்வாகி கிருஷ்ணமூர்த்தி தரப்பில் பணம் வழங்கப்பட்டது. அதை தொடர்ந்து டெபாசிட் தொகை செலுத்தப்பட்டது.

 

Related Stories: