மதவாத சக்திகளை புறக்கணித்து சரியான மதச்சார்பற்ற கூட்டணியை ஆதரிக்க வேண்டியது நமது கடமை: தமுஎக சங்கம் வலியுறுத்தல்

சென்னை: மதவாத சக்திகளை புறக்கணிப்பதோடு, சரியான மதச்சார்பற்ற கூட்டணியை ஆதரிக்க வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமையாகும். அந்த வகையில் மதவாத சக்திகளை பெயருக்கு எதிர்ப்பவர்களையும் சேர்த்து இத்தேர்தலில் புறக்கணிக்க வேண்டும் என்று தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து தமுஎக வெளியிட்ட அறிக்கை: சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 23ம் நாள் நடைபெற உள்ளது. வகுப்புவாத சக்திகளின் கொடுஞ்செயல் திட்டங்களை தமிழ்நாட்டில் நிறைவேற்றிட கடந்த பல ஆண்டுகளாகவே வலதுசாரி சக்திகள் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறார்கள். ஒற்றுமை, மத நல்லிணக்கம் காக்கும் மாநிலமாக தமிழ்நாடு விளங்கி வருகிறது, தமிழ்நாட்டு மக்கள் வகுப்புவாத சக்திகளை தொடர்ந்து புறக்கணித்து வருகிறார்கள். அந்த மரபை இந்த தேர்தலிலும் காத்திட வேண்டும், மதவாத சக்திகளை முறியடித்து, மதச்சார்பற்ற சக்திகளை வெற்றிபெறச் செய்ய வேண்டும்.

நீட் தேர்வு, தேசியக் கல்விக் கொள்கை, இந்தி மற்றும் சமஸ்கிருத திணிப்பு போன்றவற்றின் மூலம் நாட்டின் எல்லா வகையான தனித்துவங்களையும் அழிக்க தொடங்கிய அவர்களின் அதிகார கரங்கள், இன்று மிகச்சிறிய தனித்த அடையாளமாக காணப்படும் திருநர் உரிமையை பறிக்கும் வரை நீண்டுள்ளது. வக்பு வாரிய திருத்தச்சட்டம் தொடங்கி, தற்போது வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டம் வரை சிறுபான்மை மக்களை துன்புறுத்தி அவர்களின் வாழ்வுரிமையைச் சிதைக்கும் அத்தனை வேலைகளையும் சட்டப்பூர்வமாகச் செய்து வருகிறது.

அயோத்தியில் பற்றவைத்த கலவர தீயை, இன்று நம் வீட்டு வாசலான திருப்பரங்குன்றத்தில் \”தீபத்தூண்\” எனும் பெயரில் ஊதி விளையாடுகிறார்கள். நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டிற்கு உரிய சரியான சதவிகிதத்தை குறைக்கும் வகையில், நாடாளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கையை சுயேச்சையாக திருத்தப் பார்க்கிறார்கள். மதவெறியையும் அதை காக்க சாதி வெறியையும் தூண்டி வரும் அவர்கள், தங்கள் தத்துவத்தின் சாதியப் படிநிலையை பாதுகாக்க இட ஒதுக்கீடுகளே இல்லாமல் செய்யும் செயலை எல்லாத் துறைகளிலும் கொஞ்சம் கொஞ்சமாக செய்யத் தொடங்கி சமூகநீதியை குழிதோண்டிப் புதைக்கப் பார்க்கிறார்கள்.

மூன்றாம் உலக நாடுகளின் ஏகாதிபத்திய எதிர்ப்பு உணர்விற்கு எப்போதும் நாம் துணை நின்றுள்ளோம். அந்த வகையிலேயே பாலஸ்தீன விடுதலை இயக்கத்தை ஆதரித்து வருகிறோம். ஆனால் இன்று பள்ளிக் குழந்தைகளையும், அப்பாவி மக்களையும் போர் எனும் பெயரால் படுகொலை செய்யும் ஏகாதிபத்திய நாடுகளை கட்டியணைத்து கொண்டாடுவதோடு, அவர்கள் செய்யும் படுகொலைகளுக்கு ஆயுதம் வழங்கும் அளவிற்கு இந்நாட்டின் வெளியுறவுக் கொள்கையில் மாற்றம் செய்து வருகிறார்கள். இவ்வாறு தொடர்ந்து இந்நாட்டின் மரபார்ந்த பன்மைத்துவத்தை சிதைத்து வருபவர்கள் தற்போது தமிழ்நாட்டை சிதைக்கும் செயலுக்காக இந்த தேர்தலை பயன்படுத்த திட்டமிட்டுள்ளார்கள். அதற்கு தமிழ்நாட்டில் உள்ள சில மாநிலக்கட்சிகள் நேரடியாகவே உதவுகின்றன.

இன்னும் சில கட்சிகள் அவர்கள் கூட்டணியில் இல்லாத போதும் மறைமுகமாக அவர்களுக்கு உதவி செய்கிறார்கள். இந்தச் சூழலில் மதவாத சக்திகளை புறக்கணிப்பதோடு, சரியான மதச்சார்பற்ற கூட்டணியை ஆதரிக்க வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமையாகும். அந்த வகையில் மதவாத சக்திகளை பெயருக்கு எதிர்ப்பவர்களையும் சேர்த்து இத்தேர்தலில் புறக்கணிக்க வேண்டும். அதோடு, மதச்சார்பற்ற, இடதுசாரி ஜனநாயக முற்போக்கு சக்திகள் இடம்பெற்றுள்ள அணியை ஆதரித்து வெற்றிபெறச் செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: