சென்னை: இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சியான ”பாட்டாளி மக்கள் கட்சி”, அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தரப்பிலான ஒரு அணியாகவும், அவரது மகன் அன்புமணி தரப்பில் மற்றொரு அணியாகவும் பிரிந்துள்ளது. இந்நிலையில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் இந்திய தேர்தல் ஆணையம் அன்புமணிக்கு ”மாம்பழம்” சின்னம் ஒதுக்கீடு செய்தது. இது தொடர்பாக ராமதாஸ் தரப்பினர் சட்டப்போராட்டம் நடத்தி வருகின்றனர். கடைசியாக உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலின் படி பாமக கட்சி, மாம்பழச் சின்னம் ஆகியவை தொடர்பாக ராமதாஸ் தரப்பில் சிவில் நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதையடுத்து விசாரணையின் முடிவில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவில்,”அன்புமணி அல்லது ராமதாஸ் என்ற தனிநபர்களுக்காக மாம்பழம் சின்னம் ஒதுக்கீடு செய்யப்படவில்லை. தேர்தல் நடைமுறை அமலில் இருப்பதால் சின்னத்தை முடக்க நீதிமன்றத்திற்கு அனுமதியில்லை. பொது சின்னமான மாம்பழத்திற்கு முதலில் உரிமை கோரியவருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எனவே ராமதாஸ் தொடர்ந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று கடந்த மாதம் 26ம் தேதி தீர்ப்பு வழங்கி இருந்தது.
இந்த நிலையில் மேற்கண்ட உரிமையில் நீதிமன்ற உத்தரவு மற்றும் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் நடவடிக்கை ஆகியவைக்கு எதிராக ராமதாஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சூர்யகாந்த் மற்றும் நீதிபதி ஜாய்மால்யா பாக்ஷி ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது ராமதாஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்,” தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கையால் மாம்பழச் சின்னம் மிதக்கிறது. புதுவையில் அடுத்த சில தினங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. இதைத்தொடர்ந்து தமிழ்நாட்டிலும் சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ளது. எனவே பாமக கட்சி யாருக்கு என்று உறுதியாகும் என்று தெரியவரும் வரையில் மாம்பழச் சின்னத்தை முடக்கி வைக்க வேண்டும். என்று தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து அன்புமணி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ” பாமக கட்சி என்பது தற்போது அன்புமணியிடம் தான் உள்ளது. அவ்வாறு இருக்கும் நிலையில் மாம்பழச் சின்னத்தை முடக்க சொல்லி கேட்பது என்பது ஏற்க கூடியது கிடையாது. எனவே இந்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரிக்க வேண்டும் என்று தெரிவித்தார். அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட தலைமை நீதிபதி சூர்யகாந்த் பிறப்பித்த உத்தரவில்,” இந்த விவகாரத்தில் நாங்கள் தலையிட்டு எந்தவித உத்தரவும் தற்போது பிறப்பிக்க விரும்பவில்லை. உங்கள் இருவரது தரப்பு கோரிக்கைகளையும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுவாக தாக்கல் செய்யுங்கள். வழக்கின் முக்கியத்துவம் கருதி சட்டத்திற்கு உட்பட்டு உயர்நீதிமன்றம் தகுதியின் அடிப்படையில் அவசர வழக்காக பட்டியலிட்டு விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.
