கணவருடன் வீடியோ காலில் பேசியபடி டிவி சீரியல் துணை நடிகை திடீர் தற்கொலை

சென்னை: கணவருடன் வீடியோ காலில் பேசியபடி டிவி சீரியல் துணை நடிகை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இலங்கையைச் சேர்ந்தவர் சுபாஷினி (எ) சாஸ்விபாலா (36). இவர் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியலில் துணை நடிகையாக நடித்து வந்தார். பெங்களூருவைச் சேர்ந்த பிபின் சந்திரன் (38) என்பவரை கடந்த 2024 ஏப்ரல் மாதம் திருமணம் செய்துகொண்டு பெங்களூருவில் வசித்து வந்தார். டிவி சீரியல்களில் நடிப்பதற்காக சென்னை வரும்போது தங்குவதற்காக அய்யப்பன்தாங்கலில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி வந்தார்.

இந்நிலையில், சீரியலில் நடிப்பதற்காக கடந்த 3ம் தேதி சுபாஷினி பெங்களூருவில் இருந்து அய்யப்பன்தாங்கலுக்கு வந்தார். நேற்று முன்தினம் நள்ளிரவில் கணவருடன் வீடியோ காலில் பேசிக்கொண்டிருந்தபோது குடும்ப பிரச்னை காரணமாக இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் விரக்தி அடைந்த சுபாஷினி, கணவருடன் வீடியோ காலில் பேசிக்கொண்டே வீட்டில் இருந்த மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த பிபின் சந்திரன் அடுக்குமாடி குடியிருப்பு காவலாளிக்கு தகவல் தெரிவித்தார்.

இதனை அறிந்த காவலாளி போரூர் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சுபாஷினியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்கு பதிந்து குடும்ப பிரச்னை காரணமாக சுபாஷினி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதாவது காரணமா என போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும் சுபாஷினியின் கணவர் பிபின் சந்திரனிடமும் போலீசார் விசாரிக்க திட்டமிட்டுள்ளனர். திருமணமாகி இரண்டு ஆண்டுகளே ஆவதால் ஆர்டிஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. டிவி சீரியல் துணை நடிகை ஒருவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அடுக்குமாடி குடியிருப்புவாசிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: