இந்து, பவுத்த, சீக்கிய மதங்களை பின்பற்றுபவர்கள் மட்டுமே தனி தொகுதிகளில் போட்டியிட உத்தரவிட கோரி வழக்கு: உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணை

சென்னை:தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23ம் தேதி அறிவிக்கப்பட்டு வேட்பு மனு தாக்கல் சூடுபிடித்துள்ளது. மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 44 தொகுதிகள் பட்டியல் இனத்தவருக்காக ஒதுக்கப்பட்ட தொகுதிகளாக உள்ளன.
இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்து மக்கள் கட்சி நிறுவன தலைவர் அர்ஜூன் சம்பத் தாக்கல் செய்த மனுவில், இந்து, சீக்கியம் அல்லது பவுத்தம் மதத்தை பின்பற்றுபவர்களையே பட்டியல் இனத்தவர் என்று இந்திய அரசியல் சாசனம் தெரிவித்துள்ளது. இதையே உச்ச நீதிமன்றமும் சமீபத்தில் உறுதி செய்துள்ளது.

தற்போது 44 தனி தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களில் 90 சதவிகிதத்தினர் இந்து, சீக்கியம், பவுத்தம் மதத்தை பின்பற்றாதவர்கள். கிறிஸ்தவ மதத்தை சார்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது. அதனால், வேட்புமனு பரிசீலனையின் போது அரசியல் சாசனம் மற்றும் உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தீவிரமாக ஆய்வு செய்யவேண்டுமென்று அனைத்து தேர்தல் அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை பிறப்பிக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியுள்ளார். இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க கோரி அர்ஜூன் சம்பத் சார்பில் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் முறையிடப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், நாளை (இன்று) விசாரிப்பதாக தெரிவித்தனர்.

Related Stories: