சீட் மறுப்பு, புறக்கணிப்பால் விரக்தி தமிழக பாஜ தலைவர்களுக்குள் கடும் மோதல்: ஒன்றிய அமைச்சர் பியூஸ் கோயல் அண்ணாமலையுடன் பஞ்சாயத்து

சென்னை: சீட் தராமல் ஏமாற்றியதோடு, தொடர்ந்து புறக்கணிப்பதால் தமிழக பாஜ தலைவர்களுக்குள் உச்சக்கட்ட மோதல் வெடித்துள்ளது. இதனால், ஒன்றிய அமைச்சர் பியூஸ் கோயல், அண்ணாமலையை அவசரமாக அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதனால் கட்சிக்குள் பரபரப்பு நிலவுகிறது. தமிழகத்தில் அண்ணாமலைக்கும், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடிக்கும் மோதல் எழுந்தது. இருவரும் மேற்கு மண்டலத்தைச் சேர்ந்தவர்கள். ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இதனால் அவர்களுக்குள் யார் பெரியவர்கள் என்ற பிரச்னை எழுந்தது.

இதனால் ஏற்பட்ட மோதலில் கூட்டணி உடைந்தது. நாடாளுமன்ற தேர்தலில் இரு கட்சிகளும் படுதோல்வியை சந்தித்தன. எனவே, சட்டப்பேரவை தேர்தலில் கூட்டணி அமைக்க வேண்டிய கட்டாயம் இரு கட்சிகளுக்கும் ஏற்பட்டது. கூட்டணி ஏற்பட வேண்டும் என்றால் அண்ணாமலையை மாற்றியே ஆக வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி, ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவிடம் நிபந்தனை விதித்தார். இதை தொடர்ந்து அண்ணாமலை மாற்றப்பட்டு, நயினார் நாகேந்திரன் நியமிக்கப்பட்டார். அண்ணாமலை, பிரதமர் மோடியின் தீவிர ஆதரவாளர். ஆர்.எஸ்.எஸ். தலைவர்களால் சமீப நாட்களாக வளர்க்கப்பட்டு வருகிறார்.

இதனால், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன், அண்ணாமலை மோதல் போக்கை கடைபிடித்து வந்தார். இந்த மோதலால் கட்சியில் அண்ணாமலை ஓரங்கட்டப்பட்டார். பதவி எதுவும் வழங்கப்படவில்லை. தனக்கு ஒன்றிய அமைச்சர் பதவி வேண்டும் என்றார். கட்சியில் தேசிய பொறுப்பு வேண்டும் என்றார். ஆனால் தலைமையோ கண்டுகொள்ளவில்லை. இந்நிலையில் சட்டப்பேரவை தேர்தலில் சீட் வேண்டும் என்று கேட்டு வந்தார். அவர் விரும்பிய கிணத்துக்கடவு, பல்லடம், தொண்டாமுத்தூர் ஆகிய தொகுதிகளை அதிமுக வழங்கவில்லை. பாஜ தலைவர்களும் அந்த தொகுதியை கேட்டு பிடிவாதம் பிடிக்கவில்லை. அதிமுகவினர் கொடுத்த சீட்டுகளை வாங்கிக் கொண்டு வந்து விட்டனர்.

பாஜ வென்ற நெல்லை, மொடக்குறிச்சி ஆகிய தொகுதிகளையும் பறிகொடுத்து விட்டனர். மேற்கு மண்டலத்தில் பாஜ தலைவர்களுக்கான தொகுதிகள் குறைக்கப்பட்டன. அதற்கு பதில் தென் மாவட்டங்களில் வாரி வழங்கப்பட்டது. இதனால் அண்ணாமலை கடும் அதிர்ச்சி அடைந்தார். தன்னை தலைவர்கள் வேண்டும் என்றே திட்டமிட்டு புறக்கணிப்பதாக கருதி, கூட்டங்களை புறக்கணித்து வந்தார். மோடி தமிழகம் வந்தபோதும், ஒன்றிய அமைச்சர் அமித்ஷா வந்தபோதும் அவர்களை வரவேற்காமல் புறக்கணித்து வந்தார். பியூஸ் கோயலையும், தமிழக பொறுப்பாளர் பி.எல்.சந்தோஷையும் சந்திக்காமல் தவிர்த்து வந்தார்.

இந்நிலையில் இரு நாட்களுக்கு முன்னர் மோடி கேரளா வந்தார். அவர் கோவை வந்து அங்கிருந்து கேரளா சென்றார். இதனால் கோவை விமானநிலையத்தில் நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் வரவேற்றனர். அண்ணாமலை வரவில்லை. இதுகுறித்து வானதி சீனிவாசன் அளித்த பேட்டியில், அண்ணாமலையின் பெயர் வரவேற்பவர்களின் பட்டியலில் இடம் பெற்றிருந்தது. ஆனால் அவர் வரவில்லை என்று கூறினார். இதனால் மோடியை அவர் திட்டமிட்டு புறக்கணித்ததாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.

தொடர்ந்து பேட்டியளித்த நயினார் நாகேந்திரன், அண்ணாமலை ஊரிலேயே இல்லை என்றார். இந்த இரு பேட்டிகளையும் கேட்ட, அண்ணாமலை கொதித்து விட்டார். மொத்தமாக தமிழக கூட்டத்தையே அவர் புறக்கணித்து வந்தார்.
இந்தநிலையில், நேற்று காலையில் கோவையில் இருந்து சென்னை வந்த அண்ணாமலை, சிறப்பு ஹெலிகாப்டரில் புதுவை சென்று பிரசாரம் செய்தார். இன்றும், நாளையும் கேரளாவில் பிரசாரம் செய்ய அவர் திட்டமிட்டிருந்தார். ஆனால் அண்ணாமலை கடும் அதிருப்தியில் இருப்பது மேலிடத்துக்கு தெரிந்தது. மேலும், வேட்பாளர்களை தேர்வு செய்யும் கூட்டம் நேற்று சென்னையில் நடப்பதாக இருந்தது. அந்த கூட்டத்துக்கு அவர் வரவில்லை.

இதனால் நேற்று மாலை ஒன்றிய அமைச்சர் பியூஸ் கோயல் அண்ணாமலையை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, வானதியும், நயினாரும் தொடர்ந்து பொய் சொல்கின்றனர். என்னை யாரும் மோடியை வரவேற்க அழைக்கவில்லை. என் பெயரும் பட்டியலில் இல்லை. நான் கோவையில்தான் இருந்தேன். ஆனால் அவர்கள் திட்டமிட்டு என்னை அவமானப்படுத்துகின்றனர். இந்த உண்மையை பத்திரிகைகளுக்கு நான் தெரிவித்தால் அவர்கள் என்ன பதில் சொல்வார்கள். கட்சிக்குத்தான் கெட்ட பெயர் வரும். இதனால் அமைதியாகிவிட்டேன். அவர்கள் போல சிறுபிள்ளைத்தனமாக நான் பேச மாட்டேன் என்று கூறியுள்ளார். இதனால் அவரை உடனடியாக சென்னை வரும்படி கோயல் அழைத்தார்.

அதை தொடர்ந்து சிறப்பு ஹெலிகாப்டரில் அண்ணாமலை சென்னை வந்தார். ஒன்றிய அமைச்சர் பியூஸ் கோயலை அவர் சந்தித்துப் பேசியதாகவும், அப்ேபாது அண்ணாமலையை சமாதானப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. அண்ணாமலையை அவர் சமாதானப்படுத்தினாலும், தலைவர்களுக்குள் மோதல் ஏற்பட்டிருப்பது தேர்தல் நேரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் வேட்பு மனு தாக்கல் தொடங்கிவிட்டது. ஆனாலும் பாஜ வேட்பாளர் பட்டியல் இவர்களின் மோதலால் தாமதமாகி வருவது தொண்டர்களிடையே சோர்வை ஏற்படுத்தியுள்ளது. பட்டியல் வெளியாகாததால் எடப்பாடி பிரசாரத்தை தொடங்கிவிட்டார். மயிலாப்பூரில் தமிழிசையையும், வாசுதேவநல்லூரில் ஆனந்தன் அய்யாச்சாமியையும் ஆதரித்து பிரசாரம் செய்து விட்டார். பாஜ வேட்பாளர் அறிவிக்காமல், எடப்பாடி 2 பேருக்காகவும் பிரசாரம் செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: