சென்னை: சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு மக்கள் மீது சுமத்தப்படும் நியாயமற்ற சுமை என்று செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாட்டில் உள்ள 68 சுங்கச்சாவடிகளில் சுங்கக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. தனியார் பேருந்துகள், சுற்றுலாப் பேருந்துகள், சரக்கு வாகனங்கள் நீண்ட தூரம் பயணிக்கும் போது பல சுங்கச்சாவடிகளைக் கடக்க வேண்டியிருப்பதால், தினமும் இயக்கச் செலவில் சுங்கச் சாவடி கட்டணம் பெரும் சுமையாக உள்ளது. வளைகுடா போரினால் உலகெங்கும் எரிபொருள், சமையல் எரிவாயு கிடைக்காமல் தொழில்துறை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
எரிபொருள், சுங்கக் கட்டண உயர்வின் விளைவாக சரக்குப் போக்குவரத்துக்கான கட்டணங்கள் உயர்ந்து, அந்த விலை உயர்வு ஏழை, நடுத்தர மக்களின் தலையில் ஏற்றப்படுவதை ஒன்றிய அரசு உணர வேண்டும். சுங்கச்சாவடி கட்டணம் வசூலிப்பதற்கான காலம் முடிந்துவிட்ட நெடுஞ்சாலைகளில், சாலைப் பராமரிப்பு என்கிற பெயரில் கட்டண வசூல் தொடர்வதும், அந்தச் சுங்கச்சாவடிகளை அகற்ற நெடுஞ்சாலைத் துறையில் முறைப்படுத்த வேண்டிய பல பணிகள் இருக்கின்றன. அவற்றைச் செய்யாமல் ஆண்டுதோறும் சுங்கக் கட்டணத்தை மட்டும் உயர்த்திக்கொண்டிருப்பது ஒன்றிய அரசின் மக்கள் விரோதப் போக்கையே காட்டுகிறது. சுங்கச்சாவடி கட்டண உயர்வை மறுபரிசீலனை செய்து மக்கள், போக்குவரத்து துறைக்கு நிவாரணம் வழங்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
