தமிழக அரசியல் கட்சிகளின் தேர்தல் வாக்குறுதிகளில் சாத்தியம் எது? கவர்ச்சி அறிவிப்பு எது? வாக்காளர்கள் மத்தியில் அனல் பறக்கும் விவாதம்

சென்னை: தமிழக அரசியல் கட்சிகளின் தேர்தல் வாக்குறுதிகளில் சாத்தியம் எது? கவர்ச்சி அறிவிப்பு எது? என்ற விவாதம் மக்களிடையே அனல் பறந்து வருகிறது. தமிழக சட்டசபை தேர்தல் வரும் 23ம் தேதி நடக்கிறது. இன்னும் குறுகிய நாட்களே உள்ளதால் தேர்தல் களம் அனல் பறந்து வருகிறது. அரசியல் கட்சிகள் ஒவ்வொன்றும் வாக்காளர்களை கவரும் வகையில் அதிரடியான நலத்திட்டங்களை அறிவித்து வருகின்றன. ஆனால், இந்த அறிவிப்புகளுக்குப் பின்னால் இருக்கும் நிதிச் சுமை மற்றும் அவை மாநிலத்தின் நீண்டகாலப் பொருளாதாரத்தில் ஏற்படுத்தப்போகும் தாக்கம் என்ன என்பதும் குறித்தும் கேள்வி எழுந்துள்ளது. குறிப்பாக, திமுக, அதிமுக மற்றும் தவெக ஆகிய கட்சிகளின் வாக்குறுதிகளைப் புள்ளிவிவரங்களோடு ஒப்பிடும்போது, எந்தக் கட்சி நிதானமான, நடைமுறைக்கு சாத்தியமான பாதையைத் தேர்ந்தெடுத்துள்ளது என்பது வெளிச்சத்திற்கு வருகிறது.

திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளைப் பொறுத்தவரை மகளிர் உரிமைத் தொகை 2000, வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்க 8000 ரூபாய் கூப்பன், புதுமை பெண், தமிழ்ப்புதல்வன் திட்ட நிதி, விலையில்லா லேப்டாப் ஆகிய திட்டங்களை நிறைவேற்ற மொத்த திட்ட மதிப்பீடு சுமார் 57,311.5 கோடி ரூபாய் தேவைப்படலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது மற்ற இரு முக்கியக் கட்சிகளின் கவர்ச்சி அறிவிப்புகளை விடக் கணிசமாகக் குறைவு. ஆனால், ஆனால் இந்த நிதி வெறும் ‘இலவசங்களாகக்’ கரைந்துவிடாமல், மாநிலத்தின் மனிதவளத்தை மேம்படுத்தும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. மாநில அரசின் நிதி சுழற்சி முறையில் மக்களின் வாழ்க்கை தரத்தையும் திறன் மேம்பாட்டையும் உயர்த்தும் வகையில் உள்ளதாக ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

உதாரணமாக, ‘புதுமைப் பெண்’ மற்றும் ‘தமிழ்ப் புதல்வன்’ திட்டங்கள் மூலம் மாணவர்களுக்கு வழங்கப்படும் மாத உதவித்தொகை, உயர்கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவும் ஒரு பெரும் முதலீடாகும். அதேபோல், ‘நான் முதல்வன்’ போன்ற திறன் மேம்பாட்டுத் திட்டங்கள் இளைஞர்களை வேலைவாய்ப்புக்கு தகுதியானவர்களாக மாற்றுகின்றன. வெறும் பணத்தை மட்டும் கையில் கொடுக்காமல், அதன் மூலம் ஒரு தலைமுறையின் கல்வியை உறுதி செய்வதுதான் உண்மையான தொலைநோக்குப் பார்வை. திமுகவின் இந்த அணுகுமுறை, மாநிலத்தின் நிதிநிலையை கருத்தில் கொண்டு, எதார்த்தமான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என திமுக தரப்பில் கூறப்படுகிறது.

அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகளான ஒரு முறை உதவித் தொகை 10000, பெண்களுக்கான குலவிளக்குத்திட்டம், ஆண்களுக்கும் இலவச பேருந்து பயணம், இலவச சிலிண்டர்கள் போன்ற முக்கிய அறிவிப்புகள் தமிழ்நாட்டுன் தற்போதைய நிதிச் சூழலில் பெரும் சவாலை ஏற்படுத்தக்கூடியவை. அவர்களின் திட்டங்களைச் செயல்படுத்த ஆண்டுக்குச் சுமார் ரூ.74,969.8 கோடி தேவைப்படும். இதில் கவனிக்கப்பட வேண்டியது, 2 கோடி குடும்பங்களுக்கு தலா ரூ.10,000 ஒருமுறை உதவித்தொகை வழங்கும் திட்டம். இதற்கு மட்டுமே ஒரே அடியாக ரூ.20,000 கோடி தேவைப்படுகிறது.

இதுபோன்ற ‘ஒரே முறை’ திட்டங்கள் தற்காலிகமாகப் பொருளாதாரப் புழக்கத்தை ஏற்படுத்தினாலும், அவை நீண்டகால வாழ்வாதார உயர்விற்கு வழிவகுக்காது. மேலும், 3 இலவச சிலிண்டர்கள், பழைய ஓய்வூதியத் திட்டம் மற்றும் அனைத்து தரப்பினருக்கும் இலவசப் பேருந்து பயணம் போன்ற அறிவிப்புகள் ஏற்கனவே கடன் சுமையில் இருக்கும் தமிழ்நாட்டின் பொருளாதாரத்திற்கு மேலும் பல லட்சம் கோடி ரூபாய் சுமையை ஏற்றும். இவை வெறும் ‘வாக்காளர்களைக் கவரும்’ உத்திகளாகவே பொருளாதார நிபுணர்களால் பார்க்கப்படுகின்றன.

புதிதாகக் களம் இறங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் அறிவிப்புகள் இன்னும் ஒரு படி மேலே போய், ‘பாப்புலிசம்’ எனப்படும் கவர்ச்சி அரசியலின் உச்சத்தைத் தொட்டுள்ளன. இவர்களது திட்ட மதிப்பீடு சுமார் ரூ.72,765.4 கோடி. பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.2,500 உரிமைத்தொகை என்பது திமுகவின் திட்டத்தை விட அதிகம் மொத்தம் ரூ.39,000 கோடி தேவைப்படும் தவிர, 6 இலவச சிலிண்டர்கள், பிறந்த பெண் குழந்தைகளுக்கு தங்க மோதிரம், திருமணத்திற்கு 8 கிராம் தங்கம் போன்ற அறிவிப்புகள் உணர்ச்சிப்பூர்வமானவைதானே தவிர நடைமுறை சாத்தியப்பாடு மிக குறைவு. ஒரு மாநிலத்தை நிர்வகிக்கும் போது இவ்வளவு பெரிய நிதியை எங்கிருந்து திரட்டுவது என்பதற்கான எந்த ஒரு திட்டமும் இருப்பதாக தெரியவில்லை.

தேர்தல் நேரத்தில் ‘ஆபர்களை’ அள்ளி வீசுவது எளிது. ஆனால், ஒரு பொறுப்பான அரசு என்பது மாநிலத்தின் வருவாய்க்கும் செலவிற்கும் இடையே ஒரு பாலத்தை உருவாக்க வேண்டும். அந்த வகையில், திமுகவின் திட்டங்கள் கல்வி, சமத்துவம் மற்றும் யதார்த்தமான நிதி மேலாண்மை ஆகியவற்றின் அடிப்படையில் ஒரு தெளிவான பாதையை தேர்ந்தெடுத்துள்ளன. மாறாக, அதிமுக மற்றும் தவெகவின் திட்டங்கள், நிதி ஆதாரங்களைப் பற்றிய கவலையின்றி, தேர்தல் வெற்றியை மட்டுமே இலக்காகக் கொண்ட அதீத கவர்ச்சி வாக்குறுதிகளாகவே காட்சியளிக்கின்றன. சுருக்கமாகச் சொன்னால், தமிழ்நாட்டின் எதிர்காலத்தை ஒரு வலுவான பொருளாதார அடித்தளத்தில் கொண்டு செல்ல திமுகவின் ‘தொலைநோக்கு திட்டங்களே’ தற்போதைய தேவையாக தெரிகிறது என்று திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: