தமிழகத்தில் உள்ள 84 விவசாய சங்கங்களின் தலைவர்கள் ஒன்றிணைந்து தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கத்தை உருவாக்கி உள்ளனர். இதன் மாநில பொதுக்குழு மற்றும் கலந்தாய்வு கூட்டம் திருச்சியில் நடந்தது. தமிழகம் முழுவதும் இருந்து விவசாய சங்கங்களின் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்று ஆலோசனை நடத்தினர். தொடர்ந்து கூட்டு இயக்கத்தின் தலைவர் காவிரி தனபால், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநிலத்தலைவர் அய்யாக்கண்ணு, காவிரி டெல்டா பாசன விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் கே.வீ.இளங்கீரன் ஆகியோர் கூட்டாக அளித்த பேட்டி: தமிழ்நாடு விவசாய சங்கங்கள் ஒன்றிணைந்து உருவாக்கியிருக்கிற இயக்கம் மற்றும் அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் சுமார் 84 விவசாய சங்கங்கள் மற்றும் அவற்றின் பிரதிநிதிகள், முக்கிய நிா்வாகிகள் கலந்து கொண்டு கூட்டு இயக்கம் எடுக்கும் முடிவுக்கு ஆதரவு அளித்தனர். சட்டப்பேரவை தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது என ஆலோசிக்கப்பட்டது.
இதில் விதை சட்டம், மரபணு மாற்று பயிர் இறக்குமதிக்கு அனுமதி என ஒன்றிய பாஜ அரசு விவசாயிகள் விரோத நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இலவச மின்சாரத்தை தடுக்கும் வகையில் மின்சார திருத்த சட்டத்தையும் கொண்டு வருகிறது. விவசாயிகளின் விளைபொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்க நடவடிக்கை இல்லை. மாறாக விவாயிகளை அழிக்கும் நடவடிக்கைகளை ஒன்றிய பாஜ அரசு மேற்கொள்கிறது. கர்நாடகம் மேகதாட்டு அணை கட்டும் முயற்சியை ஊக்குவிக்கும் வகையில் ஒன்றிய அரசு செயல்படுகிறது. தமிழகத்தையும், தமிழக விவசாயிகளையும் வஞ்சிக்கும் பாஜ அணிக்கு சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்க மாட்டோம் என முடிவு செய்துள்ளோம். பெரும்பான்மையான விவசாயிகளுக்கு யார் நன்மை செய்வார்கள் என்பதையறிந்து விவசாயிகள் இயக்கம் முன்வைக்கும் 68 கோரிக்கைகளை, பாஜ தவிர்த்து அனைத்து அரசியல் கட்சிகளிடமும் வழங்கவுள்ளோம். எங்களது கோரிக்கைகளுக்கு யார் முழுமையாக ஆதரவு அளிக்க முன்வருகின்றனரோ அவா்களை ஆதரிப்போம். பாஜவுக்கு வாக்களிக்க மாட்டோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
* ஹோம் செகரட்டரி அமித்ஷா மாஜி மந்திரி பேஷ்…பேஷ்…
கடலூர் தொகுதியில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத் போட்டியிடுகிறார். இதற்காக கூட்டணி கட்சிகள் சார்பில் வேட்பாளர் அலுவலகம் கடலூர் புதுப்பாளையத்தில் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு நேற்று கூட்டணி கட்சிகளின் செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. அப்போது முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத் பேசும் போது, இந்த என்டிஏ கூட்டணியை உருவாக்கியவர் ஹோம் செகரட்டரி அமித்ஷா என்று கூறினார். உடனே அருகில் இருந்தவர் அமித்ஷா ஹோம் செகரட்டரி அல்ல ஹோம் மினிஸ்டர் என்று கூறினார். அதன் பிறகு அவர் ஹோம் மினிஸ்டர் அமித்ஷா என்று மாற்றி கூறினார்.
* கிழக்கு தொகுதியில் வேட்பு மனு தாக்கல் திருச்சியில் நாளை விஜய் பிரசாரம்
தவெக தலைவர் விஜய் சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடுகிறார். பெரம்பூர் தொகுதியில் நேற்று முன்தினம் வேட்பு மனு தாக்கல் செய்து பிரசாரத்தையும் துவங்கினார். திருச்சி கிழக்கு தொகுதியில் நாளை (ஏப்.2) விஜய் வேட்பு மனு தாக்கல் செய்யவுள்ளார். இதற்காக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சிக்கு நாளை (2ம்தேதி) காலை 9 மணிக்கு வரும் விஜய், திருச்சி கிழக்கு தொகுதி தாசில்தார் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்கிறார். இந்நிலையில், மனு வேட்பு மனு தாக்கல் செய்த பின்னர், திருச்சி வயர்லெஸ் சாலை, டிவிஎஸ் டோல்கேட் மற்றும் மரக்கடை பகுதிகளில் விஜய் பிரசாரம் செய்ய அனுமதி கேட்டு, செங்கோட்டையன் மற்றும் கு.ப.கிருஷ்ணன் ஆகியோர் திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் காமினியை நேற்று நேரில் சந்தித்து மனு அளித்து உள்ளனர். போலீசார் மரக்கடையில் மட்டும் பிரசாரம் மேற்கொள்ள அனுமதி வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
