சீட் கிடைக்காததால் அதிருப்தி: பாஜ கொடி இல்லாத காரில் அண்ணாமலை

தொடர் தேர்தல் தோல்விகளை சந்தித்து வரும் பாஜ முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, எதிர்வரும் சட்டப்பேரவை தேர்தலில் கோவையில் போட்டியிட திட்டமிட்டு இருந்தார். சிங்காநல்லூர், கவுண்டம்பாளையம் ஆகிய தொகுதிகளில் ஏதேனும் ஒன்றில் போட்டியிடுவதற்கு ஏற்ப, கட்சி நிர்வாகிகளிடம் ரகசிய ஆலோசனை கூட்டங்களை நடத்தினார். ஆனால், தொகுதி பங்கீட்டில் கோவையில் பாஜவிற்கு ஒரேயொரு தொகுதி மட்டுமே ஒதுக்கப்பட்டதோடு, அண்ணாமலை போட்டியிட விரும்பிய எந்த தொகுதியும் பாஜவிற்கு ஒதுக்கப்படவில்லை. இதனால் அண்ணாமலை தேர்தலில் போட்டியிடுவது கேள்விக்குறியாகியுள்ளது. தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டது அண்ணாமலைக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன் கோவை வந்த பிரதமர் மோடியை வரவேற்காமல் புறக்கணித்ததாக கூறப்படுகிறது. ஆனால், மோடியை வரவேற்கும் லிஸ்ட்டில் அண்ணாமலை பெயர் இல்லை என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த சூழலில், நேற்று கோவையில் இருந்து அண்ணாமலை, தனி ஹெலிகாப்டர் மூலம் புதுச்சேரிக்கு தேர்தல் பரப்புரைக்காக சென்றார். இதற்காக காளப்பட்டி பகுதியில் உள்ள அவரது வீட்டில் இருந்து அண்ணாமலை, கோவை விமான நிலையத்திற்கு காரில் நேற்று காலை வந்தார். வழக்கமாக பாஜ கொடி கட்டிய காரில் வலம் வரும் அண்ணாமலை, கட்சி கொடியில்லாத காரில் வந்தது சீட் கிடைக்காத அதிருப்தியின் வெளிப்பாடா என்ற கேள்வியை எழுப்பியது. இதையடுத்து கோவையில் திமுக சார்பில் செந்தில் பாலாஜி போட்டியிடுவது, தொகுதி ஒதுக்கக்கோரி ஒன்றிய அமைச்சர் பியூஸ் கோயலை சந்திப்பீர்களா உள்ளிட்ட நிருபர்களின் கேள்விகளுக்கு அண்ணாமலை பதிலளிக்காமல் கிளம்பி சென்றார்.

* அண்ணாமலை புறக்கணிப்பா? நயினார் பதில்
பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நெல்லையில் நேற்று அளித்த பேட்டி: எங்கள் கூட்டணி மகத்தான வெற்றி பெறும். பாஜ தமிழக பொறுப்பாளர் பியூஷ் கோயல் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை வெளியிடுகிறார். அதன்பின் வரும் 4ம் தேதி வேட்பாளர்கள் அந்தந்த தொகுதிகளில் மனு தாக்கல் செய்கின்றனர். நெல்லைதொகுதியில் அதிமுக போட்டியிட வேண்டும் என்று விரும்பி கேட்டுக் கொள்ளப்பட்டது. அதன் அடிப்படையில் நெல்லை தொகுதியை அதிமுகவுக்கு பாஜ விட்டுக் கொடுத்துள்ளது.

அதற்கு பதிலாக அதிமுகவிடம் இருந்து சாத்தூரை கேட்டுப் பெற்றுள்ளோம். சாத்தூரில் நான் போட்டியிடுகிறேன். ஒரு கட்சியில் (தவெக) அதிகமான இடங்களில் போட்டியிட ஆளில்லாமல் இருந்ததால் சிலர் கட்சி மாறிய உடனே அவர்களுக்கு சீட்டு வழங்கப்படுகிறது. நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் அதிமுக, பாஜ கூட்டணி 180 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும். பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை ஊரில் இல்லாததால் தான் பிரதமர் வரவேற்பு நிகழ்ச்சியில் அவர் பெயரை சேர்க்கவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

* சிறுபிள்ளைத்தனமாக பேசுகிறார் விஜய்
சென்னையில், பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நேற்று அளித்த பேட்டி: தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், திமுகவுக்கும் தான் தமிழ்நாட்டில் போட்டி. ஆனால் தமிழக வெற்றி கழகம் தலைவர் நடிகர் விஜய் சிறுபிள்ளைத்தனமாக, திமுகவுக்கும், தவெகவுக்கும் தான் போட்டி என்று பேசிக் கொண்டு இருக்கிறார். இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறினார்.

Related Stories: