ஜாடிக்கேத்த மூடி, மூடிக்கேத்த ஜாடி ரெண்டு பேரையும் ஓடஓட விரட்டுங்க… அதிமுக, பாஜ மீது துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தாக்கு

திருவண்ணாமலை தொகுதி திமுக வேட்பாளர் அமைச்சர் எ.வ. வேலுவை ஆதரித்து திருவண்ணாமலை திருவள்ளுவர் சிலை அருகே திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் மத்தியில், நேற்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: திருவண்ணாமலை தொகுதியின் வெற்றி வேட்பாளர் எ.வ.வேலு, மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்பதை இங்குள்ள எழுச்சியை பார்க்கும்போது தெளிவாக தெரிகிறது. கடந்த தேர்தலில் 95 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். இந்தமுறை குறைந்தது 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற செய்துக்காட்ட வேண்டும்.

கடந்த 2021 தேர்தலில் தலைவர் மு.க.ஸ்டாலின் சொன்ன வாக்குறுதிகள் அனைத்தையும் செய்து முடித்திருக்கிறார். ஆட்சிக்கு வந்ததும் மகளிர் விடியல் பயண திட்டத்தில் முதல் கையெழுத்திட்டார். அதன்மூலம் மகளிர் ஒவ்வொருவரும் மாதம் ரூ.900 சேமிக்கின்றனர். 5ம் வகுப்பு வரை காலை உணவு திட்டம், கல்லூரி சேரும் மாணவ, மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டம் மூலம் மாதந்தோறும் ரூ.1000 ஊக்கத்தொகை, 48 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு திட்டத்தில் 3.50 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த திட்டங்கள் எல்லாம் தொடர வேண்டுமானால் உதயசூரியன் உதிக்க வேண்டும். மீண்டும் ஆட்சி அமைந்ததும், பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்படும் என முதல்வர் உறுதி அளித்திருக்கிறார். இந்த தேர்தலில் ஹீரோவாகவும், ஹீரோயினாகவும் திமுக தேர்தல் அறிக்கை இருக்கிறது.

மீண்டும் ஆட்சி அமைந்ததும், பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்படும் என முதல்வர் உறுதி அளித்திருக்கிறார். இந்த திட்டமெல்லாம் நிறைவேற்றப்பட ஏப்ரல் 23ம் தேதி உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என மக்கள் முடிவு செய்துவிட்டார்கள். எனவே, இந்த பிரசாரத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். எடப்பாடி பழனிசாமி மீண்டும் பிஜேபிக்கு அடிமையாகி இருக்கிறார். மோடியும், அமித்ஷாவும் எப்படியாவது தமிழ்நாட்டுக்குள் பிஜேபியை கொண்டு வர வேலை பார்த்து கொண்டு இருக்கிறார்கள். இவ்வாறு அவர் பேசினார். தொடர்ந்து, தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர்களை ஆதரித்து நேற்று உதயநிதி ஸ்டாலின் திறந்தவேனில் பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது, அவர் பேசுகையில், ‘‘நம்முடைய அரசு கடந்த 5 ஆண்டில் பல்வேறு திட்டங்களை செய்துள்ளது. அதிமுக, மோடியையோ அமித்ஷாவையோ கூட்டிட்டு வராங்க. ஆனா, அவங்க தமிழ்நாட்டுக்கான திட்டங்களா ஏதாவது கொண்டு வராங்களா, இல்லை. தமிழ்நாட்டுக்காக நிதி வருகிறதா, எதுவும் வருவதில்லை. டெல்லிக்கும் தமிழ்நாட்டுக்குமான தேர்தல் இது. மோடியா, தமிழ்நாடா என்று பார்க்கக்கூடிய தேர்தல். நாம ஒவ்வொரு முறையும் ஓட ஓட விரட்டியடிக்கிறோம். இந்த தேர்தலில் மோடியையும், அமித்ஷாவையும் ஓட ஓட விரட்டுங்கள். ஜாடிக்கேத்த மூடி என்பார்கள், ஆனால் மோடிக்கேற்ற ஒரு அடிமை பழனிசாமி. முரட்டு பக்தர்களை கேள்விப்பட்டிருப்பீங்க. எடப்பாடி பழனிசாமி போன்று முரட்டு அடிமையை பார்த்திருக்கீங்களா. அப்படிப்பட்ட முரட்டு அடிமையை இந்த தேர்தலில் விரட்டி அடிங்க. இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

* சாலையில் நடந்து சென்றும், பஸ்சில் ஏறியும் வாக்கு சேகரிப்பு
திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தர்மபுரி மாவட்டத்தில் நேற்று பிரசாரம் மேற்கொண்டார். பாலக்கோடு தொகுதிக்கு சென்றபோது, கடமடை அருகில் ரயில்வே கேட் மூடப்பட்டிருந்தது. இதனால், வாகனங்கள் அணிவகுத்து நின்றன. அப்போது, பிரசார வாகனத்திலிருந்து இறங்கி சாலையில் நடந்து சென்று பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். தொடர்ந்து, அருகில் இருந்த கடையில் நிர்வாகிகள் மற்றும் வேட்பாளர்களுடன் அவர் டீ குடித்தார். அப்போது, பாலக்கோட்டிற்கு செல்ல இருந்த மகளிர் விடியல் பயண பேருந்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஏறினார்.

பேருந்தில் இருந்த மகளிர், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை கண்டு உற்சாகமடைந்தனர். அவர்களிடம் துணை முதல்வர் நலம் விசாரித்தார். அப்போது, நாங்கள் நலம், நீங்கள் நலமா எனவும், விடியல் பேருந்து பயணம் மிகவும் பயனுள்ள திட்டமாக உள்ளது. முதல்வர் நலமாக உள்ளாரா என மகளிர் வாஞ்சையுடன் விசாரித்தனர். தொடர்ந்து மகளிரிடம் திமுக ஆட்சியின் திட்டங்களை துணை முதல்வர் எடுத்துக்கூறினார். தற்போது குடும்பத்தலைவிகளுக்கு பரிசு கூப்பன் திட்டம், மகளிர் உரிமைத் தொகை ரூ.2 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என்பது உள்ளிட்ட தேர்தல் அறிக்கையை சுட்டிக்காட்டி திமுகவிற்கு வாக்களிக்க துணை முதல்வர் கேட்டுக்கொண்டார். அப்போது, மகளிர் தங்கள் வாக்குகள் உதயசூரியனுக்கே என ஆரவாரம் செய்தனர். இதன் பின்னர் பேருந்தில் இருந்து இறங்கி பிரசார வாகனத்தில் ஏறி, பாலக்கோட்டிற்கு அவர் புறப்பட்டு சென்றார்.

Related Stories: