சென்னை: சென்னை, தி.நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையகமான பாலன் இல்லத்தில் அக்கட்சியின் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் சட்டமன்ற தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். இதன் முதல் பிரதியை கட்சியின் மாநில துணைச்செயலாளர் பெரியசாமி பெற்றுக்கொண்டார். நிகழ்வில் தேர்தல் அறிக்கை தயாரிப்புக்குழு தலைவர், கட்சியின் தேசிய நிர்வாகக்குழு உறுப்பினர் டி.எம்.மூர்த்தி, மாநில செயற்குழு உறுப்பினர்கள் வஹிதா நிஜாம், டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத், மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் லெனின், மாநிலக்குழு உறுப்பினர்கள் சாந்தி, சிவா, வரதன், உதயகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சி, சிறு குறு நடுத்தர தொழில்களின் வளர்ச்சி, தமிழ்நாட்டின் விவசாயம், பாசன வசதிகள் மேம்பாடு, குடிநீர் வணிக மயமாக்கப்படுவதைத் தடுத்து அனைவருக்கும் பாதுகாப்பான குடிநீர் வழங்குதல், விவசாயிகளின் நலனை மேம்படுத்துதல், விபி ஜி ராம்ஜி திட்டத்தை கைவிட்டு மீண்டும் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி அளிப்பு சட்டத்தை மேம்படுத்தி ஆண்டுக்கு 200 நாள் வேலையும் 700 ரூபாய் தினசரி ஊதியமும் வழங்குதல், கைத்தறி உள்ளிட்ட பாரம்பரிய தொழில்களை பாதுகாத்தல், மீனவர் நலன்களை மேம்படுத்துதல், வேலைவாய்ப்பை அதிகரித்தல் மற்றும் இளைஞர் நலன், கல்வியை மேம்படுத்துதல் மற்றும் மாணவர் நலன், பெண்களின் முன்னேற்றத்திற்காக மேற்கொள்ள வேண்டிய பணிகள், குழந்தைகள் நலன்,
ஒடுக்கப்பட்ட சமூகம் உயர்வு அடைவதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள், பழங்குடி மக்களை பாதுகாத்தல், மூத்த குடிமக்களின் நலன்களைப் பேணுதல், மக்களுக்கான மருத்துவ வசதிகளை இன்னும் விரிவாக்குதல், பத்திரிகையாளர் நலனை மேம்படுத்த புதிய ஊதியக் குழு அமைத்தல், காட்சி ஊடகங்களில் பணிபுரிவோருக்கும் ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட நலன்களை விரிவு படுத்துதல், மது மற்றும் போதைப் பொருள் பிரச்னையை கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய பல் துறை நடவடிக்கைகள் மற்றும் மது போதை மீட்பு மையங்களை அமைத்தல், ஊழல் தடுப்புக்காக லோக் ஆயுக்தா சட்டத்தை உரிய வகையில் திருத்தி செயல்படுத்துதல், நடந்தாய் வாழி காவேரி திட்டத்தை செயல்படுத்துதல், பட்டாசு தொழிலை பாதுகாத்தல் ஆகியவற்றைப் பற்றி தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கான, 302 அம்ச செயல் திட்டத்தை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கை முன்வைக்கிறது.
