அதிமுக கூட்டணியில் ஒதுக்கப்பட்ட 27 தொகுதிகளுக்கு பாஜ வேட்பாளர்கள் அறிவிப்பதில் தொடர் தாமதம் ஏன்? மேலிட பொறுப்பாளர் பியூஸ் கோயல் சென்னையில் முக்கிய ஆலோசனை

சென்னை: அதிமுக கூட்டணியில் ஒதுக்கப்பட்ட 27 தொகுதிகளுக்கு பாஜ சார்பில் வேட்பாளரை அறிவிப்பதில் தொடர் தாமதம் ஏன் என்ற பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. அதே நேரத்தில் பாஜ மேலிட பொறுப்பாளர் பியூஸ் கோயல் சென்னையில் முகாமிட்டு வேட்பாளர்களை தேர்வு செய்வது தொடர்பாக முக்கிய ஆலோசனை நடத்தினார். தமிழகத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜவுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மயிலாப்பூர், தளி, மொடக்குறிச்சி, உதகை, அவிநாசி, திருப்பூர் தெற்கு, கோவை வடக்கு, கந்தர்வகோட்டை, புதுக்கோட்டை, திருப்பத்தூர், மதுரை தெற்கு, சாத்தூர், திருச்செந்தூர், வாசுதேவநல்லூர், ராதாபுரம், நாகர்கோவில், விளவங்கோடு, ஆவடி, திருவண்ணாமலை, தஞ்சாவூர், திருவாரூர், அறந்தாங்கி, ராசிபுரம், ராமநாதபுரம், பத்மநாபபுரம், மானாமதுரை, குளச்சல் ஆகிய தொகுதிகளில் பாஜ போட்டியிடுகிறது.

இந்த தேர்தலில் அண்ணாமலை கோவை மாவட்டத்தில் உள்ள சிங்காநல்லூர், சூலூர், கவுண்டம்பாளையம் உள்ளிட்டவற்றில் ஏதேனும் ஒன்றில் போட்டியிட தயாராக இருந்தார். ஆனால் இந்த தொகுதிகள் எதுவும் பாஜவுக்கு வழங்கப்படவில்லை. அதே நேரத்தில் கடந்த முறை பாஜவுக்கு சென்னையில் 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. மேலும் கூடுதலாக தொகுதிகள் கிடைக்கும் என்று தி.நகர், வேளச்சேரி ஆகிய தொகுதியில் தேர்தல் வேளையை பாஜவினர் தொடங்கி இருந்தனர்.

ஆனால், இந்த முறை ஒரு தொகுதி மட்டுமே, அதாவது மயிலாப்பூர் தொகுதி மட்டுமே ஒதுக்கப்பட்டது. பாஜவுக்கு சாதகமில்லாத தொகுதிகளை அதிமுக ஒதுக்கியுள்ளது என்று அண்ணாமலை வெளிப்படையாக குற்றச்சாட்டை சுமத்தினார். பாஜவுக்கு சாதகமான தொகுதிகள் வழங்கப்படாததை கண்டித்து பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றது. அதிருப்தியில் இருந்த அண்ணாமலை அண்மையில் நடைபெற்ற பாஜ கூட்டங்களில் கலந்துகொள்ளவில்லை. கோவை வந்த பிரதமர் மோடியை வரவேற்கும் பட்டியலில் அண்ணாமலையின் பெயர் இருந்தும் அவர் வரவில்லை.

இவ்வளவு பிரச்னைக்கு மத்தியிலும் பாஜவுக்கு ஒதுக்கப்பட்ட 27 தொகுதிகளில் யாரை வேட்பாளராக நிறுத்துவது தொடர்பாக கட்சி தலைமை ஆலோசித்து வந்தது. பாஜ மாநில தலைவர் மட்டும் தான் இந்த முறை சாத்தூர் தொகுதியில் போட்டியிட போவதாக அறிவித்துள்ளார். இதே போல மயிலாப்பூர் தொகுதியில் எடப்பாடி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட போது அவருடன் தமிழிசை சவுந்தரராஜனும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இதனால், அவர் தான் மயிலாப்பூரில் வேட்பாளராக போட்டியிட போகிறார் என்ற தகவல் வெளியானது. ஆனால் அதுவும் உறுதிப்படுத்தப்படவில்லை. இந்த தொகுதியை யாருக்கு ஒதுக்குவது என்பதில் கடும் போட்டி நிலவி வருகிறது.

தொடர்ந்து ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகளில் பலர் போட்டியிட ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் கடும் குழப்பம் நிலவி வருகிறது. வேட்பு மனு தாக்கலுக்கு ஓரிரு நாட்கள் தான் இருக்கிறது. அனைத்து கட்சிகளும் வேட்பாளர்களையும் அறிவித்தும், தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டு தேர்தல் பிரசாரத்தில் மும்முரமாக இறங்கி வருகின்றனர். ஆனால், பாஜ இதுவரை வேட்பாளர் பட்டியலை அறிவிக்கவில்லை. இதனால், பாஜவுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் யாரை ஆதரித்து பிரசாரம் செய்வது என்று தெரியாமல் பாஜ தொண்டர்கள் விழிபிதுங்கி வருகின்றனர்.

இந்த நிலையில் ஒன்றிய அமைச்சரும் தமிழக பாஜ தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயல் நேற்று சென்னை வந்தார். சென்னை வந்த அவர் தி.நகரில் உள்ள பாஜ தலைமை அலுவலகத்திற்கு வந்தார். அங்கு அவர் பாஜ வேட்பாளர்களை தேர்வு செய்வது தொடர்பாக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அப்போது யாரை வேட்பாளராக அறிவிப்பது என்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. தொடர்ந்து போட்டியிடும் வேட்பாளர்கள் பெயர் கொண்ட உத்தேச பட்டியல் தயார் செய்யப்பட்டது. இந்த பட்டியல் டெல்லி மேலிட ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

டெல்லி மேலிடம் பரிசீலித்து வேட்பாளர்களை அறிவிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இன்று அல்லது நாளை பாஜ வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என்று தெரிகிறது. அதே நேரத்தில் இன்று பங்குனி உத்திரம் மிகவும் சிறப்பு வாய்ந்த, விசேஷமான நல்ல நாளாகும். அதனால், இன்று இரவுக்குள் வெளியாக வாய்ப்புள்ளது. இதனால், பாஜ வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகுமா என்ற ஆர்வத்தில் பாஜவினர் இருந்து வருகின்றனர். இல்லாத பட்சத்தில் நாளை வெளியாகும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து பாஜ தேர்தல் அறிக்கையும் வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது. வேட்பாளர் தேர்வில் கடும் குழப்பம் நீடித்து வருவதால் தான் நேற்று சென்னை வந்த ஒன்றிய அமைச்சர் பியூஸ் கோயல், பாஜ வேட்பாளர் பட்டியல் ஓரிரு நாளில் அறிவிக்கப்படும்” என்று பேட்டியின் போது தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

* விஜய்யை பார்க்க வரும் கூட்டம் ஓட்டாக மாறாது
ஒன்றிய அமைச்சரும், தமிழக பாஜ தேர்தல் பொறுப்பாளருமான பியூஸ் கோயல் நேற்று டெல்லியில் இருந்து விமானத்தில் சென்னை வந்தார். அப்போது அவர் சென்னை விமான நிலையத்தில், செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: தமிழ்நாட்டில் பாஜ போட்டியிட இருக்கும் தொகுதிகளின் வேட்பாளர்கள் யார் என்பது குறித்து, ஆலோசனை நடந்து கொண்டு இருக்கிறது. அடுத்த ஓரிரு தினங்களில் இறுதி முடிவு எடுத்து, தமிழக பாஜ வேட்பாளர் பட்டியல் அதிகாரப்பூர்வமாக, டெல்லியில் பாஜ தலைமை வெளியிடும். நடிகர் விஜய், முதலமைச்சர் பதவி குறித்து கனவு கண்டு கொண்டு இருக்கிறார். அவருக்கு கூடுகின்ற கூட்டம், ஓட்டுகளாக மாறாது. விஜய் கட்சி தமிழ்நாட்டில் இந்த தேர்தலில் அதிகபட்சமாக நான்கு சீட்டுகளுக்கு மேல் வெற்றி பெற முடியாது. பாஜ வேட்பாளர்கள் தேர்வில் காலதாமதம் எதுவும் நடக்கவில்லை. நான் இப்போது பாஜ வேட்பாளர்கள் குறித்து, எங்கள் கட்சி நிர்வாகிகளிடம் கலந்து பேசுவதற்கு வந்திருக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: