தமிழக சட்டமன்ற தேர்தலில் நடிகர் மன்சூர் அலிகானின் இந்திய ஜனநாயக புலிகள் கட்சி திருச்சி மாவட்டத்தில் லால்குடி, திருச்சி கிழக்கு, திருவெறும்பூர், மணப்பாறை ஆகிய 4 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதில் லால்குடி தொகுதியில் மன்சூர் அலிகான் போட்டியிடுகிறார். தேர்தல் பிரச்சாரத்திற்காக நேற்று லால்குடி வந்த மன்சூர் அலிகான், திடீரென கல்லக்குடி ரயில் நிலையம் வந்தார். தொடர்ந்து, ரயில்வே தண்டவாளத்தில் சிறிது தூரம் நடந்து சென்றார். அப்போது அவர், திடீரென தண்டவாளத்தில் தலைவைத்து படுத்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனை பார்த்த போலீசார், பதறிபோய் அவரிடம் என்னவென கேட்க, உடனே மன்சூர் அலிகான் தனக்கு கலைஞர் ஞாபகம் வந்து விட்டது. இதனால் தண்டவாளத்தில் தலை வைத்து படுத்துள்ளேன் என்றார்.
அப்போது மன்சூர் அலிகான் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘தமிழகத்தில் இந்தி திணிப்பை எதிர்த்து கலைஞர், இதே கல்லக்குடியில் இப்படி தான் தண்டவாளத்தில் தலை வைத்து படுத்தார். அதே போலத்தான் நானும் இதே தண்டவாளத்தில் தலை வைத்து படுத்து இங்கிருந்தே தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறேன். 10 முறை 5 முறை வென்று பதவியில் இருப்பவர்களால் பொதுமக்களின் கோரிக்கைகள், விவசாயிகளின் தேவைகளை பூர்த்தி செய்யப்படவில்லை. அனைத்தும் மாற்றப்பட வேண்டும், மக்கள் எங்களுக்கு வாக்களிப்பார்கள், நாங்கள் வீட்டுக்கு வீடு சென்று வாக்கு கேட்போம்’’ என்றார்.
