பணம் கொடுத்தவர்களுக்கு சீட்டா? சாட்டையை சுழற்றிய ராகுல்: புதிய பட்டியலை தயாரிக்க அதிரடி உத்தரவு

 

 

* இன்று இரவு காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிக்க வாய்ப்யு

தமிழகத்தில் சட்டப் பேரவை தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கிய நிலையில், அனைத்து கட்சிகளும் வேட்பாளர்களை படுவேகமாக அறிவித்து வருகின்றனர். திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்து பிரசாரத்தை தொடங்கி விட்டன. திமுக வேட்பாளர்கள் ஒரே கட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளனர். திமுகவை தொடர்ந்து தேமுதிக, மதிமுக, கொமதேக, மமக, ஐயூஎம்எல், மஜக உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டுள்ளனர். இன்னும் திமுக கூட்டணியில் காங்கிரஸ் உள்ளிட்ட ஒரு சில கட்சிகள் மட்டுமே வேட்பாளர்களை அறிவிக்காமல் உள்ளது.

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி பொன்னேரி, பெரும்புதூர், சோளிங்கர், உதகமண்டலம், ஈரோடு கிழக்கு, அறந்தாங்கி, கடலூர், மயிலாடுதுறை, காரைக்குடி, சிவகாசி, திருவாடனை, வைகுண்டம், நாங்குநேரி, குளச்சல், விளவங்கோடு, கிள்ளியூர், வேளச்சேரி, ஊத்தங்கரை, துறையூர், கவுண்டம்பாளையம், ஆத்தூர், பென்னாகரம், சிங்காநல்லூர், அம்பாசமுத்திரம், கிருஷ்ணகிரி, உசிலம்பட்டி, சங்கரன்கோவில், மேலூர் ஆகிய 28 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த முறை அதிமுகவை நேரடியாக 18 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி எதிர்த்து களமிறங்குகிறது.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கிவிட்ட நிலையில், காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்கள் பட்டியலை இறுதி செய்யும் பணியை டெல்லி மேலிடம் வேகப்படுத்தி வருகிறது. காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்ட 28 தொகுதிகளை சேர்ந்த மூத்த தலைவர்கள், முக்கிய நிர்வாகிகள் என ஒரு பெரும் படையே டெல்லியில் முகாமிட்டுள்ளனர். தங்கள் ஆதரவு தலைவர்கள் மூலம் வாய்ப்பு கேட்டு மேலிடத்துக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர். மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை மற்றும் மூத்த தலைவர்கள் வேட்பாளர்களை இறுதி செய்வதற்காக டெல்லி சென்றுள்ளனர்.

ஏற்கனவே வேட்பாளர்களை தேர்வு செய்வதற்கான ஸ்கிரீனிங் குழு கூட்டம் இரண்டு முறை நடந்தது. அப்போது ஒவ்வொரு தொகுதிக்கும் 3 பேர் கொண்ட பட்டியல் தயாரிக்கப்பட்டது. அதை இறுதி செய்வதற்கான ஆலோசனை நடைபெற்றது. பின்னர் இறுதிக்கட்ட வேட்பாளர் பட்டியல் தயார் செய்யப்பட்டு மேலிடத்தில் வழங்கப்பட்டது. இதையடுத்து, வேட்பாளர் பட்டியலை இறுதி செய்வதற்கான மத்திய தேர்தல் மையக்குழு கூட்டம் ராகுல் காந்தி தலைமையில் நடந்தது. இந்த வேட்பாளர் பட்டியலை பார்த்த ராகுல் காந்தி அதிருப்தி அடைந்ததாக கூறப்படுகிறது.

ஏனென்றால், குறிப்பிட்ட சில தொகுதிகளுக்கு பணம் பெற்றுக் கொண்டு காங்கிரஸ் கட்சியில் வேட்பாளர்கள் தேர்வு நடந்ததாக ராகுல்காந்திக்கு புகார் வந்ததாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து வேட்பாளர் பட்டியலை பார்த்த அவரும் வேட்பாளர்கள் பட்டியலில் குளறுபடிகள் நடந்திருப்பதாக அதிருப்தி தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், தனது அனுமதி இல்லாமல் தமிழக காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை வெளியிடக்கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தமிழக காங்கிரசார் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த குற்றச்சாட்டை தொடர்ந்து, ஏற்கனவே தயாரித்த வேட்பாளர் பட்டியலுக்கு பதிலாக, புதிய வேட்பாளர்கள் பட்டியலை தயார் செய்ய ராகுல் காந்தி உத்தரவிட்டுள்ளதாக தெரிகிறது. இதனால் தான் காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் வெளியாவதில் குழப்பம் நீடித்துள்ளது. இதை தொடர்ந்து, நேற்று இரவு டெல்லியில் நடந்த மத்திய காங்கிரஸ் தேர்தல் மையக்குழு கூட்டத்தில் புதிய வேட்பாளர்கள் பட்டியல் சமர்ப்பிக்கப்பட்டது. இதில் இறுதி செய்யப்படும் வேட்பாளர் பட்டியலை ராகுல்காந்தியிடம் ஒப்படைக்க உள்ளனர். அவர் தலைமையில் வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. எனவே இன்று இரவு காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: