தங்கம் திருடியது யாரப்பா? கம்யூனிஸ்ட் தானே ஐயப்பா… கேரளாவில் ராகுல் ‘ரைமிங்’ பிரசாரம்

 

 

சபரிமலை ஐயப்பன் கோயிலில் தங்கம் திருடப்பட்ட சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக கேரள உயர்நீதிமன்றத்தின் நேரடி கண்காணிப்பில் சிறப்பு புலனாய்வுக் குழு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியது. இதில் திருவிதாங்கூர் தேவசம் போர்டின் 2 முன்னாள் தலைவர்கள், முன்னாள் உயரதிகாரிகள் உள்பட 12 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் பெரும்பாலானோர் ஆளும் கட்சியான சிபிஎம்மின் முக்கிய தலைவர்கள் ஆவர். கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான பத்மகுமார் என்பவர் முன்னாள் சிபிஎம் எம்எல்ஏ ஆவார். இவர் தேவசம் போர்டின் தலைவராகவும் இருந்தார்.

சபரிமலையில் தங்கம் திருடியவர்களில் பெரும்பாலானோர் சிபிஎம்முக்கு மிகவும் நெருக்கமானவர்கள் என்பதால் அவர்களை கிண்டலடிக்கும் வகையில் சமீபத்தில் ‘தங்கம் திருடியது யாரப்பா அது கம்யூனிஸ்ட் தோழர்கள் தானே ஐயப்பா’ என்ற ஒரு நையாண்டி பாடல் வெளியாகி கேரளாவில் சூப்பர் ஹிட் ஆனது. கேரளாவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்கள் இந்த பாடலைத் தான் தங்களது பிரசார ஆயுதமாக பயன்படுத்தினர்.

கேரளாவில் எங்கு பார்த்தாலும் இந்த நையாண்டி பாடல் தான் ஒலித்தது. உள்ளாட்சித் தேர்தலில் கிடைத்த படுதோல்விக்கு இந்த நையாண்டி பாடல் தான் காரணம் என்று சிபிஎம் கருதும் அளவுக்கு நிலைமை பரிதாபகரமானது. இதைத்தொடர்ந்து இந்தப் பாடலுக்கு தடை விதிக்கக் கோரி சிபிஎம் சார்பில் கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. இந்நிலையில் காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நேற்று கேரளா வந்தார்.

அவர் பத்தனம்திட்டாவில் நடந்த பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். ராகுல் காந்தி பேசத் தொடங்கிய போது, சொர்ணம் கட்டது யாரப்பா (தங்கம் திருடியது யாரப்பா) என்று அங்கு திரண்டிருந்தவர்களை பார்த்து கேட்டார். உடனே, ‘அது தோழர்கள் தானே ஐயப்பா’ என்று தொண்டர்கள் அந்த நையாண்டி பாடலை முழுமை செய்தனர். ராகுல் காந்தியின் இந்த நையாண்டி பாடலை கேட்டு காங்கிரஸ் தொண்டர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.

Related Stories: