கொளத்தூர் தொகுதியில் நேற்று வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் உடனடியாக தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார்: சாலையின் இருபுறமும் மக்கள் உற்சாக வரவேற்பு

 

சென்னை: கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு, உடனடியாக தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். அப்போது, சாலையில் இருபுறமும் மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தமிழகத்தில் அடுத்த மாதம் 23ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் நேற்று மதியம் 12 மணிக்கு கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுவதற்காக வேட்பு மனு தாக்கல் செய்வதற்காக பெரம்பூர் பேப்பர் மில் சாலையில் உள்ள கொளத்தூர் மாநகராட்சி மண்டல அலுவலகத்திற்கு வந்தார்.

சரியாக பிற்பகல் 12.10 மணிக்கு தேர்தல் நடத்தும் அதிகாரி சாந்தியிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். தொடர்ந்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதிமொழி வாசித்து, உறுதிமொழி பத்திரத்தில் கையெழுத்திட்டார். அப்போது அவருடன் திமுக சட்டத்துறை செயலாளர் என்.ஆர்.இளங்கோ. மூத்த வழக்கறிஞரும் கொளத்தூர் தொகுதி பொறுப்பாளருமான விடுதலை, முன்னாள் அரசு வழக்கறிஞர் சண்முகசுந்தரம், சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் உடன் இருந்தனர். முதல்வர் மு.க.ஸ்டாலின் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தபோது ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு மேல் சாலையில் இருபுறமும் நின்று பெண்கள், ஆண்கள் அவருக்கு வரவேற்பு அளித்தனர்.

தொடர்ந்து மு.க.ஸ்டாலின் வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு வெளியே வந்ததும், அவருக்கான பிரசார வாகனத்தில் ஏறி அங்கிருந்தே திறந்த ஜீப்பில் பேப்பர் மில் சாலையில் பிரசார பயணத்தை தொடங்கினார். அப்போது அங்கு சாலையின் இருபுறமும் திரண்டிருந்த தொண்டர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். முதல்வர் மு.க.ஸ்டாலின் அங்கு கூடி இருந்த தொண்டர்களை பார்த்து கையசைத்து வாக்கு சேகரித்தார். அப்போது வழிநெடுக கூடியிருந்த ஏராளமான ஆண்களும், பெண்களும் கையசைத்து, ‘‘மீண்டும் கொளத்தூர் தொகுதியில் வெற்றி பெறுவீர்கள்’’ என்று உற்சாகமாக குரல் எழுப்பி வாழ்த்தினர்.

பிரசாரத்தின்போது, தனது 5 ஆண்டு கால ஆட்சியில் கொளத்தூர் தொகுதிக்கு செய்துள்ள சாதனைகளை எடுத்துரைக்கும் கையேடு புத்தகத்தை தொகுதி மக்களிடம் வழிநெடுக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். முதல்வர் பிரசாரத்தின்போது மாவட்ட செயலாளர் சேகர்பாபு, எம்பி கலாநிதி வீராசாமி, மாநிலங்களவை உறுப்பினர் வழக்கறிஞர் கிரிராஜன், மேயர் பிரியா, அம்பத்தூர் சட்டமன்ற வேட்பாளர் பூர்ணிமா, பகுதி செயலாளர் ஐசிஎப் முரளிதரன் உள்ளிட்ட திமுகவினர் உடன் சென்றனர்.

கொளத்தூரில் ஸ்டாலின் 4வது முறையாக போட்டி
கொளத்தூர் சட்டப்பேரவை தொகுதியில் 4வது முறையாக முதல்வர் மு.க.ஸ்டாலின் போட்டியிடுகிறார். கடந்த 2011, 2016 மற்றும் 2021 சட்டப்பேரவை தேர்தல்களில் மு.க.ஸ்டாலின் கொளத்தூரில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2021ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சுமார் 70,300க்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தார். தற்போது, 2026ம் ஆண்டு தேர்தலில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் போட்டியிடுவது 4வது முறையாகும்.

200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் திமுக வெற்றி பெறும்
முதல்வர் மு.க.ஸ்டாலின் வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு வெளியே வந்து நிருபர்களிடம் கூறும்போது, ‘‘கொளத்தூர் வாக்காள பெருமக்கள், திராவிட முன்னேற்ற கழக வேட்பாளராக நிறுத்தப்பட்டிருக்கக்கூடிய என்னை அமோகமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைப்பார்கள் என்று முழு நம்பிக்கையுடன் இருக்கிறேன். திமுக கூட்டணி எப்போதும் போல் வலுவாக இருக்கும். டெல்லியை எதிர்த்து தமிழகம் போராடிக் கொண்டிருக்கிறது. கொளத்தூரில் இதுவரை இல்லாத அளவு மக்கள் ஆதரவு இருப்பதை பார்க்கிறேன். தேர்தல் அறிக்கை வெளியிட்ட பிறகு கிடைக்கும் ஆதரவை பார்த்தால் திமுக கூட்டணி 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றிபெறும்’’ என்றார்.

Related Stories: