தமிழக சட்டமன்ற தேர்தலில் நடிகரும், சமூக ஆர்வலருமான மன்சூர் அலிகானின் இந்திய ஜனநாயக புலிகள் கட்சி திருச்சி மாவட்டத்தில் 4 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதில் லால்குடி தொகுதியில் மன்சூர் அலிகான் போட்டியிடுகிறார். இதே தொகுதியில் திமுக சார்பில் பாரிவள்ளல், அதிமுக சார்பில் லீமா ரோஸ் போட்டியிடுகின்றனர். தேர்தலில் போட்டியிடுவது குறித்து மன்சூர் அலிகான் கூறுகையில், ‘நான் 2011ம் ஆண்டிலேயே திருச்சியில் தனியாக போட்டியிட்டேன். நான் வளர்ந்த பள்ளப்பட்டி என்ற ஊர் திருச்சி மாவட்டத்தில்தான் இருந்தது.
இந்திய ஜனநாயக புலிகள் கட்சி சார்பில் திமுகவில் சீட் கேட்டோம். 6 மாதமாக அலைந்தோம். பிறகு எடப்பாடி பழனிசாமியை சந்தித்து சிலமுறை பேசினேன். யாரும் கண்டுகொள்ளாததால் லால்குடி, திருச்சி கிழக்கு, திருவெறும்பூர், மணப்பாறை ஆகிய 4 தொகுதிகளில் தனித்து போட்டியிட உள்ளோம். இங்கு 10 முறை, 5 முறை வென்றவர்களால் வாழை சாகுபடி விவசாயிகளின் தேவைகள், பொதுமக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமலேயே உள்ளது. தமிழ்நாடு முழுவதும் போதைப்பொருள் சிறுவர்களுக்கு தடையில்லாமல் கிடைக்கிறது.
காவல்துறை அதை ஏன் தடுக்கவில்லை? திருச்சி மக்கள் எங்களுக்கு நிச்சயமாக வாக்களிப்பார்கள். வீட்டுக்கு வீடு சென்று வாக்கு கேட்கிறோம்’ என்றார்.
