குமரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளில் கன்னியாகுமரி தொகுதியில் மட்டும் அதிமுக களமிறங்கி உள்ளது. அந்த தொகுதியில் 5வது முறையாக தற்போதைய எம்எல்ஏ தளவாய்சுந்தரம் போட்டியிடுகிறார். மீதி 5 தொகுதிகளிலும் கூட்டணி கட்சிகள் போட்டியிடுவதால், அதிமுகவினர் அதிர்ச்சியடைந்தனர். அதிமுகவுக்கு ஒதுக்கப்பட்ட ஒரு தொகுதியில் வேட்பாளராக தளவாய்சுந்தரம் அறிவிக்கப்பட்டால், சுயேச்சையாக களமிறங்குவேன் என்று முன்னாள் எம்எல்ஏ நாஞ்சில் முருகேசன் தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில், தளவாய்சுந்தரமே மீண்டும் அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டு, நேற்று முன்தினம் (ஞாயிறு) அவரை ஆதரித்து பிரசாரம் செய்ய, அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி குமரி மாவட்டம் வந்தார். ஒரு வேளை எடப்பாடி தங்கி இருந்த ஓட்டல் முன் போராட்டம் நடக்கலாம் என்ற தகவலால், அங்கு ஏ.எஸ்.பி. லலித்குமார் தலைமையில் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது. இதற்கிடையே குமரி மாவட்டம் வந்த எடப்பாடி பழனிசாமியை சந்திக்க நாஞ்சில் முருகேசன், அவர் தங்கி இருந்த ஓட்டலுக்கு வந்தார்.
அவருடன் அவரது மகளும், கவுன்சிலருமான ஸ்ரீலிஜா மற்றும் மருமகன் உள்ளிட்டோரும் வந்தனர். அப்போது எடப்பாடி பழனிசாமி, நாஞ்சில் முருகேசனை சமாதானப்படுத்தும் வகையில் பேசியதாக கூறப்படுகிறது. இன்னும் உங்களுக்கு பல்வேறு பொறுப்புகள் இருக்கிறது என, நாஞ்சில் முருகேசனிடம் ஆசை வார்த்தை கூறி உள்ளாராம். சில நிமிடங்கள் பேசி விட்டு, எடப்பாடி பிரசாரத்துக்கு கிளம்பி விட்டார். நாகர்கோவில் மாநகராட்சி மேயர் தேர்தலில் தனது மகள் ஸ்ரீலிஜாவுக்கு வாய்ப்பு தரப்படும் என உறுதிமொழியை எடப்பாடியிடம் நாஞ்சில் முருகேசன் எதிர்பார்த்து இருந்தார்.
ஆனால் அவர் பார்க்கலாம் என கூறி உள்ளதாக கூறப்படுகிறது. எடப்பாடியுடன் சந்திப்பை தொடர்ந்து, நாகர்கோவில், கன்னியாகுமரியில் அவர் சுயேச்சையாக போட்டியிடவில்லை என கூறப்படுகிறது. கட்சியில் இருந்து நீக்கப்படுவதுடன், மகளின் அரசியல் எதிர்காலத்தை பாதிக்கும் என்பதால் நாஞ்சில் முருகேசன் பின்வாங்கியதாக கூறப்படுகிறது. அதேசமயம் தேர்தல் பணியில் இருந்து ஒதுங்கி கொள்ள நாஞ்சில் முருகேசன் முடிவு செய்து உள்ளாராம்.
