அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா குடும்பத்தின் சொத்து மதிப்பு கடந்த 10 ஆண்டுகளில் மிக அதிகமாக உயர்ந்துள்ளதை காங்கிரஸ் கேள்வி எழுப்பி உள்ளது. இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் சுப்ரியா ஷ்ரினேட் கூறியதாவது: அசாம் மாநில மக்களின் வேலைவாய்ப்பு போன்ற அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்க்காமல், முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தனது குடும்பத்திற்காகச் சொத்து சேர்ப்பதில் மட்டுமே கவனம் செலுத்திச் செயல்பட்டுள்ளார் . தேர்தல் பிரமாணப் பத்திரங்களில் முதல்வர் பகிர்ந்துகொண்ட தகவல்களின் அடிப்படையில் பார்க்கும்போது, கடந்த ஐந்து ஆண்டுகளில் ஒரே ஒரு நபரும் அவரது குடும்பத்தினரும் மட்டுமே மிகப்பெரிய செல்வந்தர்கள் ஆகியுள்ளனர் என்பது தெளிவாகிறது. இதை ஒரு அசாம் மாதிரி என்பதை விட, ஒரு சொத்துச் சேர்க்கை மாதிரி என்றே அழைக்க வேண்டும்.
முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மாவின் தனிப்பட்ட சொத்து மதிப்பு 2016ல் ரூ. 1.02 கோடியிலிருந்து ரூ. 2.36 கோடியாக உயர்ந்துள்ளது. அதே வேளையில் அவருக்குச் சொந்தமாக எந்தவொரு அசையாச் சொத்தும் தொடர்ந்து இல்லாமல் உள்ளது. இதற்கு மாறாக, அதே காலகட்டத்தில் அவரது மனைவியின் சொத்து மதிப்பு ரூ. 1.77 கோடியிலிருந்து ரூ. 13.59 கோடியாக உயர்ந்துள்ளது. அதாவது சர்மாவின் மனைவியின் அசையாச் சொத்து மதிப்பு 2016ல் ரூ. 3.5 கோடியிலிருந்து 2021-ல் ரூ. 4.3 கோடியாக உயர்ந்து, 2026-ல் ரூ. 19.25 கோடியை எட்டியுள்ளது. இந்தச் சொத்துச் சேர்க்கையானது, அவரது தனிப்பட்ட வருவாயால் அல்லாமல், பெருமளவில் அவரது மனைவியின் சொத்துக்களாலேயே நிகழ்ந்துள்ளது.
ஒரு பொதுப் பதவியை வகிக்கும் அதே வேளையில், குடும்பச் சொத்து மதிப்பு 6 மடங்கு உயர்ந்திருப்பதற்குப் பின்னால் உள்ள பொருளாதார நடவடிக்கை என்ன என்பதை நாங்கள் அறிந்துகொள்ள விரும்புகிறோம். அசாம் முதல்வர் கடந்த மூன்று தேர்தல்களில் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரங்களையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, அவருக்குச் சொந்தமாக எந்த அசையாச் சொத்தும் இல்லை; இருப்பினும் குடும்பச் சொத்து மதிப்பு வியக்கத்தக்க வகையில் விரிவடைந்துள்ளது. அரசியல் அதிகாரமும் சொத்துரிமைக்கான பொறுப்பும் ஒன்றுக்கொன்று பிரிக்கப்பட்டுவிட்டனவா?. முதல்வர் தனது குடும்பச் சொத்து விவகாரங்களில் மட்டுமே மும்முரமாக உள்ளார்.
இளைஞர்களிடையே வேலையின்மை விகிதம் மிக அதிகமாக உள்ளது; அதே வேளையில் வேலைவாய்ப்புகளை வழங்கக்கூடிய பெரிய அளவிலான தொழிற்சாலைகள் எதுவும் இங்கு இல்லை. எனவே முதல்வர் தனது குடும்பத்தின் சொத்து வளர்ச்சி குறித்துப் பதிலளிக்க வேண்டும்; வரவிருக்கும் தேர்தல்களில் மக்கள் அவரைப் பொறுப்பேற்கச் செய்வார்கள். இவ்வாறு கூறினார்.
