பிரதமரை வரவேற்பதில் பெயர் இருந்ததா? இல்லையா? பொய் சொன்ன வானதி; ஆதாரத்துடன் சிக்க வைத்த அண்ணாமலை டீம்: கோவையில் போட்டியிட்டால் எதிராக செயல்பட திட்டம்

 

கேரள மாநிலம் பாலக்காட்டில் நடந்த பிரசாரத்தில் பங்கேற்க பிரதமர் மோடி டெல்லியில் இருந்து விமானம் மூலம் நேற்று முன்தினம் கோவை வந்தார். பிரதமர் மோடிக்கு பாஜ மற்றும் கூட்டணி சார்பில் உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்த வரவேற்பு நிகழ்ச்சியில், பாஜ முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்கவில்லை. கோவையில் போட்டியிட சீட் வழங்காததால்தான், பிரதமர் மோடியை அண்ணாமலை புறக்கணித்ததாக தகவல் வெளியானது. இதுதொடர்பாக பாஜ தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசனிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பிய போது, ‘‘நான் வந்தவுடன் அண்ணாமலை எப்பொழுது வருகிறார் என கேட்டேன்.

பிரதமரை வரவேற்கும் லிஸ்டில் அவரது பெயர் கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால் அவர் தான் வரவில்லை என தகவல் வந்தது. அது என்னவென்று தம்பியிடம் கேட்கிறேன்’’ என பதில் அளித்தார். இந்நிலையில், அண்ணாமலை ஆதரவாளர்கள் பிரதமர் வரவேற்பாளர் பட்டியலை இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர். அந்த பட்டியலில் பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், இணை அமைச்சர் எல்.முருகன், வானதி சீனிவாசன், எஸ்.பி.வேலுமணி, பி.ஆர்.ஜி அருண்குமார் உள்பட 19 நபர்களின் பெயர் இடம் பெற்று இருந்தது.

இந்த பெயர் பட்டியலில் அண்ணாமலையின் பெயர் இடம்பெறவில்லை. இதனை சுட்டிக்காட்டி, வானதி சீனிவாசன் எந்த பட்டியலை பார்த்து அண்ணாமலை பெயர் வரவேற்பு பட்டியலில் இருந்தது என குறிப்பிட்டார் என கேட்டு அவரது ஆதரவாளர்கள் மற்றும் நெட்டிசன்கள் இணையதளத்தில் வானதியை வறுத்தெடுத்து வருகின்றனர். குறிப்பாக, அண்ணாமலைக்கு எதிராக வானதி தொடர்ந்து அரசியல் செய்து வருவதாகவும், அவருக்கு எதிராக தனது வன்மத்தை பதிவு செய்து பொய்யான தகவலை கூறி இருப்பதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

கோவை வடக்கு தொகுதியில் வானதி போட்டியிட்டால் அவருக்கு எதிராக செயல்படுவோம் என அண்ணாமலையின் ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர். இது குறித்து வானதி ஆதரவாளர்கள் தரப்பில் கூறுகையில், ‘‘பிரதமர் வரவேற்பில் யார் யார் கலந்து கொள்வார்கள் என்ற பட்டியலில் அண்ணாமலை பெயர் முதலில் இருந்தது. தற்போது இணையத்தில் சுற்றிவரும் பட்டியல் என்பது இறுதியாக தயாரிக்கப்பட்டது. அண்ணாமலை பிரதமர் வரவேற்பில் கலந்து கொள்ளவில்லை என்பதால் அவர் பெயர் அந்த பட்டியலில் இடம் பெறவில்லை’’ என்றனர்.

Related Stories: