தேர்தல் மன்னன் தோல்வியில் சாதனை: 253வது முறையாக வேட்பு மனு

 

சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று துவங்கியது. சேலம் மாவட்டம், மேட்டூரைச் சேர்ந்த தேர்தல் மன்னன் டாக்டர் பத்மராஜன், முதல்நபராக வேட்பு மனு தாக்கல் செய்வதற்காக, காலை 9 மணிக்கே மேட்டூர் ஆர்டிஓ அலுவலகத்திற்கு டூவீலரில் தனது உதவியாளருடன் வந்தார். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அவரை உள்ளே விட மறுத்து, 10 மணிக்கு பிறகு வரும்படி கூறி திருப்பி அனுப்பி விட்டனர். அப்போது, பத்மராஜன் அரண்மனைக்கு எதிர்மனை ஏதுங்க, நீங்கள் விட்டால் செல்கிறேன், இல்லாவிட்டால் பிறகு வருகிறேன் என்று கூறிக்கொண்டு திரும்பிச் சென்றார்.

பின்னர், காலை 10 மணிக்கு வந்தவர், மேட்டூர் ஆர்டிஓ அலுவலகத்தில் தனது 253வது வேட்பு மனுவை, தேர்தல் நடத்தும் அலுவலரான சுகுமாரிடம் தாக்கல் செய்தார். சரியாக காலை 11 மணிக்கு, தனது வேட்பு மனுவை முதல் நபராக மேட்டூர் ஆர்டிஓவிடம் வழங்கிய அவர், உறுதிமொழி எடுத்துக் கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பத்மராஜன் கூறியதாவது: வெற்றி மட்டுமே சாதனை அல்ல. தோல்வியிலும் சாதனை படைக்கலாம் என்பதற்காக, கூட்டுறவு சங்க தேர்தல் முதல் ஜனாதிபதி தேர்தல் வரை, வேட்புமனு தாக்கல் செய்து வருகிறேன்.

கடந்த 1988ம் ஆண்டு சட்டமன்ற பொதுத்தேர்தலில், எனது முதல் வேட்பு மனுவை தாக்கல் செய்தேன். இப்போது 253வது வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளேன். 1996ல் தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, கேரளம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் ஒரே நேரத்தில் 5 நாடாளுமன்ற தொகுதிகளிலும், 3 சட்டமன்ற தொகுதிகளிலும் வேட்பு மனு தாக்கல் செய்தேன். முன்னாள் முதல்வர்கள் கலைஞர், ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி, தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் போட்டியிடும் தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளேன்.

அதேபோல், முன்னாள் பிரதமர் நரசிம்மராவ் மற்றும் ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் போட்டியிட்ட தொகுதிகளிலும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளேன். 2011ம் ஆண்டு மேட்டூர் சட்டமன்ற தேர்தலில், அதிகபட்சமாக 6,273 வாக்குகள் பெற்றேன். தேர்தல்களில் அதிக தோல்விகளை சந்தித்த வேட்பாளர் என்று, லிம்கா புத்தகத்தில் எனது சாதனை இடம் பெற்றுள்ளது. உலக சாதனை புத்தகமான கின்னஸ் புத்தகத்திலும் பதிவு செய்துள்ளேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories: