கட்சிக்காரன் இல்லை… நான் ஜாதி வெறியன்… கம்பம் தவெக வேட்பாளர் வீடியோ வைரல்

 

தேனி மாவட்டம், கம்பத்தைச் சேர்ந்தவர் ஜெகநாத் மிஸ்ரா. இவர் கடந்த 30 ஆண்டுகளாக தேசிய செட்டியார்கள் பேரவை என்ற அமைப்பை நிறுவி நடத்தி வருகிறார். 2025, செப்டம்பரில் இந்த அமைப்பை நமது மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியாக உருவாக்கினார். அதனை தொடர்ந்து அவர், 2026 தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிட திட்டமிட்டுள்ளோம் எனத் தெரிவித்திருந்தார். மேலும், தனித்து போட்டியிடுவதா அல்லது கூட்டணியுடன் சேர்ந்து போட்டியிடுவதா என்ற குழப்பத்தில் ஜெகநாத் மிஸ்ரா இருந்து வந்தார். நேற்று முன்தினம் தவெக வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் தலைவர் விஜய் வெளியிட்டிருந்தார். அதில், கம்பம் தொகுதியில் ஜெகநாத் மிஸ்ரா போட்டியிடுவார் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த சூழலில் ஜெகநாத் மிஸ்ராவின் பழைய வீடியோக்கள் மீண்டும் இணையத்தில் டிரெண்டிங் ஆகி வருகிறது. அதில், ‘‘இன்று தமிழகத்தில் 6.18 கோடி வாக்காளர்கள் இருக்கிறார்கள் என்றால், ஒட்டு மொத்த செட்டியாரும் ஒன்று சேர்ந்தால் 2 கோடி வாக்காளர் இருக்கோம். 2 கோடி வாக்காளர் இல்லை. 1.50 கோடி வாக்காளர்களாவது இருப்போம். நாம என்ன சொல்றோம். அனைத்து செட்டியார்கள் ஒன்று சேர்ந்தால் 1.50 கோடி வாக்காளர் வைத்தாலும், இங்கு இருக்கக் கூடிய 6.50 கோடி வாக்காளர்களில் ஐந்தில் ஒரு பங்கு செட்டியார் இன வாக்காளர்கள் இருக்கிறோம்.

இதில் எத்தனை பேர் சட்டமன்றத்தில் போய் உட்கார்ந்து இருக்கிறோம்? இதை பேசினால் ஜெகநாத் மிஸ்ரா எம்எல்ஏவாக பார்க்கிறார் என 15 ஆண்டுகளாக சொல்லிக் கொண்டிருக்கின்றனர். ஜெகநாத் மிஸ்ரா எம்எல்ஏவுக்கு மேல போயாச்சு… நான் சட்டமன்ற உறுப்பினர் ஆக வேண்டிய அவசியம் இல்லை. என் இனத்தை சேர்ந்தவர்களை சட்டமன்றத்திலே உட்கார வைத்து அழகு பார்ப்பது தான் என்னுடைய வேலை. நான் எந்த கட்சிக்காரனும் கிடையாது. ஜாதி வெறியன்’’ என பேசியுள்ளார்.

‘வேட்பாளரை மாத்தலைனா வேலை செய்ய மாட்டோம்’- தலைமைக்கு தவெகவினர் மிரட்டல்
தவெகவில் பாதிக்கு பாதி மாற்றுக்கட்சியில் இருந்து வந்தவர்களுக்கு சீட், தொகுதிக்கு சம்பந்தமில்லாதவர்களுக்கு சீட், பணம் கொடுத்தவர்களுக்கு சீட் என வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளதால், பல ஆண்டுகளாக விஜய் ரசிகர் மன்றத்தில் இருந்து பணியாற்றி வரும் பலர் அதிருப்தி அடைந்து உள்ளனர். இதுவரை பல கோடி ரூபாய் செலவு செய்தும் எங்களுக்கு சீட் தரவில்லை என கூறி பல மாவட்டங்களில் தவெகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம், பழநி சட்டமன்ற தொகுதிக்கு செங்கோட்டையனுடன் அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்த மகுடீஸ்வரன் என்பவரது மகனும், டாக்டருமான பிரவீன்குமாருக்கு தவெக தலைமை சீட்டு வழங்கி உள்ளது. இதனால் எம்எல்ஏ சீட்டை எதிர்பார்த்து பழநி தொகுதியில் பல லட்சங்களை செலவு செய்த மாவட்ட செயற்குழு உறுப்பினரான பாலன் கடும் ஏமாற்றமடைந்தார். வேட்பாளர் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து சமூக வலைதளங்களில் அவரது ஆதரவாளர்கள் தலைமையால் அறிவிக்கப்பட்ட வேட்பாளரை கடுமையாக விமர்சனம் செய்து வந்தனர்.

இந்நிலையில் நேற்று பழநி – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தவெக கட்சி அலுவலகத்தில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் வேட்பாளரை மாற்றம் செய்யாவிட்டால் தேர்தல் பணிகளை புறக்கணிக்க போவதாக கட்சி நிர்வாகிகள் தலைமைக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். வேட்புமனு தாக்கல் நடைபெற்று வரும் நிலையில் கட்சி நிர்வாகிகளின் போராட்டம் பழநி தொகுதி தவெக கட்சியினரிடம் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

தவெக அலுவலகம் முற்றுகை
தவெக வேட்பாளராக ஜெகநாத் மிஸ்ராவை அறிவித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, கம்பம் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள தவெக கட்சி அலுவலகத்தை நேற்று அக்கட்சியினர் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியதாவது, ‘‘சட்டமன்ற தொகுதி வேட்பாளராக கட்சியைச் சேர்ந்த ஒருவரை தலைமை அறிவிக்கும் என பணிகள் செய்து வந்தோம். திடீரென வேறு ஒருவரை தலைமை எப்படி அறிவித்தது என தெரியவில்லை’’ என்றனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து தவெக நிர்வாகிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

செங்ஸ் எதிராக தவெக மாஜி சுயேச்சையாக போட்டி
கோபியில் இலவச டியூசன் சென்டர் நடத்தி வருபவர் ஆனந்த குமார். இவர் விஜய் ரசிகர் மன்றத்தில் 20 ஆண்டுகளாக இருந்துள்ளார். விஜய் ரசிகர் மன்றத்தின் மாவட்ட பொறுப்பில் இருந்த ஆனந்தகுமார் தவெக துவங்கப்பட்ட போது கோபி தொகுதி பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். அதனை தொடர்ந்து மாவட்ட செயலாளர் பதவி கொடுப்பதற்காக 20 லட்சம் ரூபாய் அவரிடம் தலைமை நிர்வாகிகள் கேட்டதாக கூறப்படுகிறது. பணம் செலுத்த முன்வந்த போதிலும் அவருக்கு கிடைக்காமல் புதிதாக வந்தவர்களுக்கு அந்த பதவியை கொடுத்ததாக தெரிகிறது.

இதனால் அதிருப்தியடைந்த ஆனந்தகுமார் தவெகவில் இருந்து சில மாதங்களுக்கு முன் வெளியேறினார். இதனிடையே, கோபி தொகுதியில் தற்போது தவெக சார்பில் கே.ஏ. செங்கோட்டையன் அறிவிக்கப்பட்டு அவர் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். ஆனால் செங்கோட்டையனுக்கு எதிராக ஆனந்த குமார் சுயேச்சையாக களம் இறங்கி உள்ளார். இதையடுத்து நேற்று தனது வேட்பு மனுவை அவரும் தாக்கல் செய்தார். செங்கோட்டையனுக்கு எதிராக தவெகவில் இருந்து வெளியேறிய மாஜி நிர்வாகி சுயேச்சையாக களம் இறங்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: