திருமலை: தெலங்கானா மாநிலம் ஐதராபாத் ஓல்டுடவுன் பகுதியை சேர்ந்தவர் சூர்யாபாய் (35). இவர் எப்போதும் உடலில் கிலோ கணக்கில் நகைகளை அணிந்து அனைவரையும் கவர்ந்து வந்தார். இதனால் அவர் குறுகிய காலத்தில் சமூக வலைதளத்தில் வைரலானார். இந்நிலையில் அவரை அடையாளம் கண்ட அதிகாரிகள், விசாரணைக்கு அழைத்தனர். அப்போது, அவர் 12 வகையான நகைகளை அணிந்து சென்றார். ஆரம்பத்தில், அந்த நகைகளின் மதிப்பு சுமார் ரூ.1 கோடி என அதிகாரிகளிடம் பெருமையாக கூறினார். இருப்பினும், விசாரணை தீவிரமடைந்த நிலையில் அவர் தனது கருத்தை மாற்றிக்கொண்டார். வருமான வரித்துறை மதிப்பீட்டாளர்கள் நகைகளை பரிசோதித்தபோது, அவற்றின் மொத்த மதிப்பு ரூ.3 லட்சம் என்பது தெரிந்தது. குறிப்பாக அவர் அணிந்திருந்த பெரும்பாலான நகைகள் செம்பின் மீது ரேடியம் பூசப்பட்டவை என்பதை தெரியவந்தது. தீவிர விசாரணையில் சினிமா சான்சுக்காகவும், பொதுவெளியில் தன்னை அனைவரும் தங்க மனிதர் என அழைக்க விரும்பியும் போலி நகைகளை அணிந்து சுற்றித்திரிந்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் விடுவித்தனர்.
