மம்தா பானர்ஜி வாக்காளர்களை மிரட்டுகிறார்: தேர்தல் ஆணையத்தில் பாஜ புகார்

புதுடெல்லி: மேற்குவங்கத்தில் மொத்தமுள்ள 294 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு வரும் ஏப்ரல் 23, 29 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் வாக்காளர்களை மிரட்டுவதாக பாஜ புகார் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக ஒன்றிய அமைச்சர் கிரண் ரிஜிஜூ, பியூஷ் கோயல், சுகந்தா மஜூம்தார் உள்ளிட்டோர் அடங்கிய பாஜ குழுவினர் நேற்று தேர்தல் ஆணைய அதிகாரிகளை சந்தித்து புகார் மனு அளித்துள்ளனர்.

அந்த மனுவில், “தற்போதைய முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜி, மற்றும் அக்கட்சியின் முக்கிய தலைவர்கள் வாக்காளர்களை மிரட்டும் வகையில் செயல்பட்டு வருகின்றனர். தேர்தல் செயல்பாடுகளின்போது மம்தா பானர்ஜி மற்றும் அக்கட்சி எம்பி மஹூவா மொய்த்ரா உள்ளிட்ட சிலர் தெரிவித்த கருத்துகள், அவை நடத்தை விதிகள் மற்றும் பாரதிய நியாய சன்ஹிதாவின் பல்வேறு விதிகளை மீறுவதாக உள்ளது. மேலும், வாக்காளர்களை மிரட்டும் வகையில் பேசி வருகின்றனர்.

மேற்குவங்க காவல்துறையினர் ஆளுங்கட்சிக்கு உடந்தையாக இருப்பதால் செயலற்றதாகி விட்டது. எனவே, அனைத்து வன்முறை மிரட்டல்களுக்கு எதிராக மாநில நிர்வாகமும், காவல்துறையும் பாரபட்சமின்றி செயல்படுவதை உறுதி செய்ய கூடுதலாக ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை தேர்தல் பணிகளில் உடனே நியமிக்க வேண்டும். அத்துடன், வாக்காளர்களை மிரட்டும் செயல்களில் ஈடுபடும் மம்தா பானர்ஜி தேர்தல் பிரசாரங்களில் பங்கேற்க தடை விதிக்க வேண்டும். வாக்காளர்களை மிரட்டும் விதமாக பேசி வரும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும். மேற்குவங்கத்தில் நியாயமாக நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும்” என தெரிவித்துள்ளனர்.

Related Stories: