பெல்டா: சமூகத்தின் அனைத்துப் பிரிவினரிடையேயும் மோதலைத் தூண்டுவதாக பாஜ மீது முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டினார். மேற்குவங்க மாநிலம் பெல்டா மாவட்டத்தில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு முதல்வர் மம்தா பேசியதாவது: நாட்டில் கலவரங்களைத் தூண்டிவிட்டு ஆட்சிக்கு வந்த பிரதமர் மோடி மற்றும் அமித் ஷா ஆகியோரின் மீதுதான் முதலாவதாக ஒரு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட வேண்டும். ஆனால் அமித்ஷா மேற்குவங்க அரசு மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளார். பாஜ சமூகத்தின் அனைத்துப் பிரிவினரிடையேயும் மோதலைத் தூண்டி வருகிறது.
இத்தகைய மோதல்களால் உருவாகும் சூழலைப் பயன்படுத்திக்கொண்டு, நாட்டைச் சூறையாடவே அது விரும்புகிறது. இந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் முதல் நிர்வாக மற்றும் காவல்துறை சேவைகள் வரை அனைவரையும் பிளவுபடுத்த பாஜ முயற்சிக்கிறது. மிகச் சிறப்பாகப் பணியாற்றி வந்த குடிமைப் பணி அதிகாரிகள் உள்ளிட்ட பல அரசு அதிகாரிகள், தற்போது அவமதிக்கப்பட்டு வருகிறார்கள். தேர்தல் நடைபெறவுள்ள பிற மாநிலங்களுக்கு, பல மூத்த அதிகாரிகள் தேர்தல் ஆணையத்தால் தன்னிச்சையாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது பாஜவின் வலியுறுத்தலின் பேரிலேயே நடைபெற்றுள்ளது. இவ்வாறு குற்றம் சாட்டினார்.
