கொல்கத்தா: மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தல்களுக்கு முன்னதாக தலைமைத் தேர்தல் அதிகாரியின் அலுவலகத்தைச் சேர்ந்த நான்கு மூத்த அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டனர். இந்த இடமாற்றங்களில், தலைமைத் தேர்தல் அதிகாரியின் அலுவலகத்தில் பணியாற்றும் அதிகாரிகளும், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையில் பணியாற்றும் ஒரு அதிகாரியும் அடங்குவர். துணைத் தலைமைத் தேர்தல் அதிகாரியாகப் பணியாற்றிய சுப்ரதா பால், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையின் மூத்த துணைச் செயலாளராக இடமாற்றம் செய்யப்பட்டார். தலைமைத் தேர்தல் அதிகாரியின் அலுவலகத்தில் கூடுதல் செயலாளராகப் பணியாற்றிய நரேந்திர நாத் தத்தா, தொழிலாளர் துறையின் கூடுதல் செயலாளராக நியமிக்கப்பட்டார். தலைமைத் தேர்தல் அதிகாரியின் அலுவலகத்தில் இணைச் செயலாளராகப் பணியாற்றிய மிது சர்க்கார், சிறுபான்மையினர் நலன் துறையின் இணைச் செயலாளராக நியமிக்கப்பட்டார். சுகாதாரத்துறையில் கூடுதல் செயலாளராகப் பணியாற்றி வந்த ராகுல் நாத், தலைமைத் தேர்தல் அதிகாரியின் அலுவலகத்தில் இணைத் தலைமைத் தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.
