திருவனந்தபுரம்: கேரளாவில் ஏப்ரல் 9 அன்று நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில், தங்கள் முதல் வாக்கைச் செலுத்தும் வாக்காளர்களுக்கு, தேர்தல் ஆணையத்தின் ஒரு புதுமையான முன்னெடுப்பின் கீழ் அல்வா வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரளா சட்டப்பேரவை தேர்தலில் இளைஞர்களின் பங்கேற்பை ஊக்குவிக்கும் வகையில், ‘வாக்கு இனிக்கும் கேரளா இயக்கம்’ என்ற தலைப்பிலான ஒரு சிறப்புத் திட்டத்தை தலைமைத் தேர்தல் அதிகாரி ரத்தன் யு. கேல்கர் அறிவித்துள்ளார். அந்த உத்தரவின்படி, இளைஞர்களின் வாக்குப்பதிவு விகிதத்தை அதிகரிக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, மாவட்டங்கள் முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட வாக்குச்சாவடிகளில், முதல்முறை வாக்காளர்களுக்குச் சிறப்பு முத்திரையிடப்பட்ட அல்வா விநியோகிக்கப்படும். இந்தத் திட்டத்திற்காகத் தேர்ந்தெடுக்கப்படும் வாக்குச்சாவடிகளை மாவட்டத் தேர்தல் அதிகாரிகள் அடையாளம் காண்பார்கள்.
அதை தொடர்ந்து அந்த அதிகாரிகளின் அலுவலகங்களுக்கு 200 அல்வா பாக்கெட்டுகள் அனுப்பிவைக்கப்படும். முதல்முறை வாக்காளர்களைச் சரிபார்ப்பதற்கும், குறிப்பிட்ட வாக்குச்சாவடிகளில் அல்வா பாக்கெட்டுகளின் விநியோகம் முறையாக நடைபெறுவதை உறுதி செய்வதற்கும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மற்றும் தன்னார்வலர்கள் பொறுப்பாவார்கள். இந்த விநியோகச் செயல்முறை தேர்தல் நடைமுறைகளுக்கு எவ்விதத் தடையையும் ஏற்படுத்தக்கூடாது. தேவைப்பட்டால் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு உதவக் கூடுதல் தன்னார்வலர்களைப் பணியில் அமர்த்தலாம். பொதுமக்கள் விழிப்புணர்வு மற்றும் அறிக்கை சமர்ப்பிக்கும் நோக்கங்களுக்காக, அல்வா விநியோக நிகழ்வைச் சுருக்கமான புகைப்படம் அல்லது காணொளி வடிவில் ஆவணப்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும் என்று உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
