புதுடெல்லி: வீடுகள் மற்றும் வீட்டு வசதி குறித்த மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் டெல்லி, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் நாளை தொடங்குகிறது. நாட்டின் 16வது மக்கள்தொகை கணக்கெடுப்பு அடுத்த ஆண்டு பிப்ரவரியில் நடத்தப்பட உள்ளது. இதற்கு முன்னதாக, வீடுகள் மற்றும் வீட்டு வசதி குறித்த மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் நாளை தொடங்குகிறது. இந்த கணக்கெடுப்பு டெல்லி, கர்நாடகா, அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள், கோவா, சிக்கிம், ஒடிசா, லட்சத்தீவு மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்களில் நடக்கும். இம்முறை, டிஜிட்டல் முறையில் தகவல்களைச் சமர்ப்பிக்கக்கூடிய சுய கணக்கெடுப்பு முறை முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து வீடு வீடாக கணக்கெடுக்கும் பணி வரும் 15ம் தேதி முதல் மே 15 வரை நடத்தப்படும்.
இது குறித்து இந்திய பதிவாளர் ஜெனரலும், மக்கள் தொகைக் கணக்கெடுப்பு ஆணையருமான மிருத்யுஞ்சய் குமார் நாராயண் டெல்லியில் நேற்று கூறியதாவது: மக்கள் தொகை கணக்கெடுப்பு சட்டத்தின் 15வது பிரிவின் கீழ் அனைத்து தனிநபர் தரவுகளும் ரகசியமாக வைக்கப்படும். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அதைப் பகிரவோ, நீதிமன்றத்தில் சான்றாகப் பயன்படுத்தவோ, அரசு அல்லது தனியார் என எந்தவொரு அமைப்புடனும் அதைப் பகிரவோ முடியாது. எனவே அவை தவறாகப் பயன்படுத்தப்படும் என்ற அச்சம் தேவையற்றது. முன்பு, தரவுகள் காகிதத்தில் சேகரிக்கப்பட்டன. அவற்றை டிஜிட்டல் மயமாக்க அதிக நேரம் பிடித்தது. நாங்கள் தொடக்கத்திலிருந்தே டிஜிட்டல் தரவுகளைப் பெறத் தொடங்குவோம். எனவே அத்தகைய தரவுகளை மிக விரைவில் வெளியிட முடியும். பல தரவுத் தொகுப்புகள் 2027ம் ஆண்டிலேயே வெளியிடப்படும்.
மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் போது எந்த ஆவணங்களையும் வழங்கத் தேவையில்லை. மொபைல் செயலி மூலம் தரவுகள் சேகரிக்கப்படும். கணக்கெடுப்பில், சாதி தொடர்பான தரவுகள் 2ம் கட்டத்தில் சேகரிக்கப்படும். இதில் கேட்கப்படும் கேள்விகள் பின்னர் முடிவு செய்யப்படும். தேசிய மக்கள் தொகை பதிவேட்டைப் புதுப்பிப்பது தொடர்பாக இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார். சுய கணக்கெடுப்பு செய்ய விரும்புபவர்களுக்கு தனி இணையதளம் உருவக்கப்பட்டுள்ளது. முதல் கட்ட கணக்கெடுப்பில் வீடுகள் மற்றும் வீட்டு வசதி குறித்து மக்களிடம் கேட்கப்பட உள்ள 33 கேள்விகளை அரசு அந்த இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. மேலும் அது தொடர்பாக அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளும் வெளியிடப்பட்டுள்ளன.
* கேட்கப்படும் கேள்விகள்
வீட்டின் தரை மற்றும் கூரை அமைப்பதற்குப் பயன்படுத்தப்பட்ட பொருட்கள், அங்கு வசிக்கும் திருமணமான தம்பதிகளின் எண்ணிக்கை, குடும்பத் தலைவரின் பாலினம், நுகரப்படும் தானிய வகை, அடிப்படை மற்றும் நவீன வசதிகளுக்கான அணுகல், மற்றும் சொந்தமாக வைத்துள்ள வாகனங்களின் வகைகள் போன்ற கேள்விகள் முதல் கட்டத்தின்போது கேட்கப்படும். மேலும், அந்த வீடு எதற்காகப் பயன்படுத்தப்படுகிறது, அதன் தற்போதைய நிலை மற்றும் அந்த வீட்டில் வழக்கமாக வசிக்கும் நபர்களின் எண்ணிக்கை ஆகியவை குறித்துக் கேள்விகள் கேட்பார்கள். மேலும், குடும்பத் தலைவரின் பெயர் மற்றும் பாலினம், அவர் பட்டியல் சாதி, பட்டியல் பழங்குடியினர் அல்லது பிற சமூகங்களைச் சேர்ந்தவரா மற்றும் வீட்டின் உரிமை நிலை ஆகியவை குறித்த தகவல்களையும் அதிகாரிகள் சேகரிப்பார்கள்.
* லிவ் இன் உறவில் இருப்பவர்கள் எப்படி குறிப்பிடுவது?
மக்கள்தொகை கணக்கெடுப்பு தொடர்பாக அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் பட்டியலில், ‘லிவ்-இன்’ உறவில் இருப்பவர்கள், தம்பதியினராக கருதப்படுவார்களா? என்ற கேள்விக்கு ‘லிவ்-இன்’ உறவில் இருப்பவர்கள், இணக்கமாக இருக்கும்பட்சத்தில் மக்கள்தொகை கணக்கெடுப்பின் போது ‘திருமணமான தம்பதி’ என்றே குறிப்பிடலாம் என அரசு பதிலளித்துள்ளது.
